தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? தலைமைச்செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Views - 287 Likes - 0 Liked
-
சென்னை,தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை என்ற அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வ ரத்தினம் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக தொழில்கள் முடங்கி வாழ்வாதாரம் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இ-பாஸ் அவசியம் இல்லை என தெரிவித்த நிலையில் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இ-பாஸ் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுமட்டுமல்லாமல் வயதான பெற்றோரை நேரில் சென்று பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி பயில இருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து நேரடியாக சென்று பார்க்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான தனி மனித உரிமையை இ-பாஸ் திட்டம் தடுத்து வருகிறது.இதுபோன்ற செயல், மனித உரிமை மீறல் என்பதால் இ-பாஸ் திட்டத்தை ரத்து செய்து பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் 4 வாரத்தில் தனது விளக்கத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.News