அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை - பள்ளி கல்வித்துறை
Views - 267 Likes - 0 Liked
-
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் (நேற்று முன்தினமும், நேற்றும்) சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதவிர சுயநிதி பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.News