600 விநாயகர் சிலைகள் வீடுகளில் பிரதிஷ்டை- கலெக்டர் நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி தகவல்
Views - 64 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் விநாயகர் ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் அரசு உத்தரவுப்படி பொது இடங்களில் சிலைகளை வைக்காமலும், ஊர்வலம் நடத்தாமலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதாவது வீடுகள் மற்றும் சிறிய கோவில்களில் சிலை வைத்து தினமும் பூஜைகள் செய்து கடல் தவிர அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலையை கரைப்பதாகவும் தெரிவித்துள்ளன.
அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு மும்பையில் தயார் செய்வது போல மிகவும் அழகான விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்துள்ளனர். இந்த சிலைகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாநில பேச்சாளர் அசோகன், நாகர்கோவில் கிழக்கு மாநகர் தலைவர் மகாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் மிசா சோமன் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று வழக்கமாக 2 ஆயிரத்து 100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருப்பதால் வெறும் 600 சிலைகள் மட்டும் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதுவும் 3 நாட்கள் மட்டுமே காலை மற்றும் மாலையில் பூஜை செய்து 3-வது நாள் மாலையில் நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படும். அதுவும் ஊர்வலம் இல்லாமல், பொதுக்கூட்டம் மற்றும் சமய மாநாடு நடத்தாமல் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சிலைகள் கரைக்கப்படும். மேலும் அரசு அறிவுறுத்தியபடி கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது” என்றார்.
அப்போது “பொது இடங்களில் சிலை வைக்க கூடாது என்றும், ஊர்வலம் நடத்த கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்ய எந்த தடையும் இல்லை” என்று கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
News