கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களும் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்கள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோயில்களில் வழக்கம்போல பூஜைகளும் ஆராதனைகளும் நடந்து வந்தன. மேலும் கோயில் திருவிழாக்களுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் அரசின் நடைமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி இன்று காலை முதல் பக்தர்கள் சில வழிகாட்டுதல்கள் படி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். கோயில் நுழைவு வாயிலில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கோயில்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக கூட்டம் வரும் கோயில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், குமார கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.