நீண்ட இடைவெளிக்கு பின் பொது போக்குவரத்து முழு வீச்சில் தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத்திற்கு பின் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பொது போக்குவரத்து மட்டும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு மண்டலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை தொடங்கியது. ஆனால், தொற்று பன்மடங்காக அதிகரித்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பொது போக்குவரத்து இல்லாததால் வேலைகளுக்கு செல்லவும், ஆஸ்பத்திரி போன்ற பல்வேறு தேவைகளுக்கு செல்லவும் இயலாமல் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மிக அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் நடந்தும், டூவீலர்களில் லிப்ட் கேட்டும், ஆட்டோ வாடகைக்கு அமர்த்தியும் செல்லும் நிலை ஏற்பட்டது. பஸ் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. இதனால், வியாபாரமும் பெரும் அளவில் சரிந்தது.
இந்நிலையில், நேற்று முதல் பொது போக்குவரத்து முழு வீச்சில் தொடங்கியது. இதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் அதிக அளவில் வந்து சென்றதை காண முடிந்தது. வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் லக்கேஷ்களுடன் குடும்பமாக வந்து பஸ் ஏறி சென்றனர். சுமார், ஐந்து மாதங்களுக்கு பின் தொலை தூர பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தாக்கத்தை தொடர்ந்து பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் குடும்பங்களை விட்டு, தனியாக தவித்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ள நிலையிலும், பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக சமூக இடைவெளி கடைபிடித்தல் சாத்தியமாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது