நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதற்கிடையே நாகர்கோவிலில் மழை பெய்து வருவதால், சாலைகள் அனைத்தும் சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதற்கிடையே கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் நேற்று மணிமேடை, மீனாட்சிபுரம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் என மொத்தம் 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.