குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்தும் காணப்படுகின்றன.
இந்நிலையில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்குளம் சந்திப்பில் நேற்று காலை தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 4 மின்கம்பங்கள் சாலையில் முறிந்து கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
மேலும், மின்சாரத் தூண்கள் சாலையில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து காணப்படும் அப்பகுதியில் அதிர்ஷ்டவசமாக விபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த வக்கீல் பாலகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிணைந்த இளைஞர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் யாரும் மின்சார கம்பம் அருகில் வராமல் ஏற்பாடு செய்தனர். இதனால் பெரும் விபத்துகள் தடுக்கப்பட்டது.
மேலும் அவ்வழியாக வரும் பஸ் போக்குவரத்தையும் எச்சரித்து மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். இதனைத் தொடர்ந்து மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொட்டும் மழையிலும் சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தென்னை மரம் விழுந்ததில் முறிந்த நான்கு மின்சார தூண்களை சீர் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.