திருவட்டார் அருகே சகதி நிறைந்த சாலையை சீரமைக்க கேட்டு புதர்கள் நட்டு நூதனமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருவட்டார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கட்டைக்கால் வழியாக சந்தணப்பறம்பு, மாத்தார் செல்லும் ரோடு சுமார் ஒரு வருடமாக குண்டும், குழியுமாகவும் சல்லிகள் பெயர்ந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் காணப்படும் குண்டுகளில் மழை நீர் நிரம்பி சகதியும் சேறுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் செல்லும் ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் சகதி குழியில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. அதுபோல் நடந்து செல்லும் பாதசாரிகள் உடலில் சகதி பரவுவதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த சிதலமடைந்த சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட பஞ்., நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதனால் ஆத்திரடைந்த இப்பகுதி மக்கள் சாலையில் காணப்படும் குண்டுகளில் செடி கொப்புகளை நட்டு வைத்து நூதன முறையில் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.