" If you fell down yesterday, stand up today."

வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதி தடுப்பு பணி தீவிரம்

Views - 47     Likes - 0     Liked


  • தக்கலை ஐஓபி வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் சக ஊழியர்கள் சளி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தக்கலை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் உட்பட மூன்று ஆண்கள், ஏழு பெண்கள் மற்றும் பிற பணியாளர்கள் 2 உட்பட 12 பேர் பணியில் உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுக்கு பின் வங்கி பணியாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வங்கியில் பணிபுரிந்து வந்தனர். மேலும் வாடிக்கையாளர்கள் கவனமுடன் வந்து செல்ல பாதுகாப்பு உட்பட பல்வேறு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் கொரோனா வைரஸ் பற்றிய பயமில்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து சென்றனர். இந்த வங்கியில் நாகர்கோயில் கோட்டார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கிளர்க்காக பணி செய்து வந்தார். கொரோனா காலத்திலும் பணி புரிந்த இந்த அரசு ஊழியரை கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வங்கிப் பணி மூன்று நாட்கள் முடக்கப்பட்டதாக தெரிகிறது. அரசு ஊழியரை கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்ட சம்பவம் தெரியாமல் வாடிக்கையாளர்கள் நேற்று 21ம் தேதி கொட்டும் மழையிலும் வங்கிக்கு வந்து திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் ராஜாராம், ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் வழிகாட்டுதலில் ,மேற்பார்வையாளர் மோகன் முன்னிலையில், தூய்மைப் பணியாளர்கள் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை பணி செய்து பிளீச்சிங் பவுடர் வீசி கிருமிநாசினி அடித்தனர். மேலும் வங்கி சக ஊழியர்களும் சளி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பயந்து வாழும் மக்கள் மத்தியில் வங்கி ஊழியருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று நெருக்கடியால் வாடிக்கையாளர்கள் கதிகலங்கி உள்ளனர்.

    News