நாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு
Views - 37 Likes - 0 Liked
-
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தல்சந்திரா. இவருடைய மகன் ஜெய்தீப் (வயது 22). இவர் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு கண்ணாடி மொத்த கடையில் பாரம் ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் ஜெய்தீப் வழக்கம்போல் கடையில் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் பெரிய அளவிலான கண்ணாடிகள் உள்ள டிரேயை நகர்த்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென அவை நிலைகுலைந்து கீழே விழுந்தன. அதில் ஒரு பெரிய கண்ணாடி ஜெய்தீப்பின் கழுத்தில் விழுந்து வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேலும் அவருடன் பணியாற்றிய மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கணேஷ் (20), நாகர்கோவில் சாந்தான்செட்டிவிளையைச் சேர்ந்த அஜித் (21) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெய்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் ஜெய்தீப் கடந்த 22 நாட்களுக்கு முன்புதான் வேலைக்காக குமரி மாவட்டம் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அவருடைய உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்த வாலிபருக்கு இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News