டிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி மருத்துவர் தற்கொலையால் பரபரப்பு
Views - 43 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி டி.எஸ்.பி. தொடர் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, மருத்துவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள்(48). மருத்துவரான இவர் அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.திமுக மருத்துவரணியிலும் பொறுப்பில் உள்ளார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராக உள்ளார். சிவராம பெருமாள் நேற்று இரவு தனது வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அந்த கடிதத்தில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் என பெயரை குறிப்பிட்டு, தனது தற்கொலைக்கு அவரே காரணம் என எழுதி வைத்துள்ளார். சம்பவத்தன்று கரோனா பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையில் இருந்து திரும்பிய தனது மனைவியை காரில் தான் அழைத்து வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. தன்னையும், தனது மனைவியையும் தகாத வார்த்தையால் பேசினார்.
அத்துடன், தொடர்ந்து போனில் பல நாட்களாக மிரட்டி வந்தார். தனது மனைவியையும் அவதூறாக பேசினார். இதனால் மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால், காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. சிவராம பெருமாளின் உடலையும், கடிதத்தையும் கைப்பற்றி சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News