" Love For All, Hatred For None."

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Views - 101     Likes - 0     Liked


 • தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார்.

  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டபோது எடுத்த படம்.

  குமரி மாவட்ட மக்களும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தார்கள். தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டு அந்த கோரிக்கைகளை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஏழை எளியவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களுக்கு அவர்களுடைய பெயர்களை சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது.

  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இந்தப்பகுதி மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை நான் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

  பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் ஆவார். இவர் சிறந்த நிர்வாகி. தொலைநோக்கு பார்வையுடன் ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை வகுத்தவர். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணக்குடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, லூர்தம்மாள் சைமன் பாலம் என பெயர் சூட்டப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அதேபோல இந்திய சுதந்திர போராட்ட வீரர் சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்த தொண்டினை போற்றி அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக நாகர்கோவில் மாநகராட்சி வார்டு எண்-18 ல் கோட்டார் இடலாக்குடி சந்தி தெருவுக்கு சதாவதானி செய்குதம்பி பாவலர் தெரு என்று பெயர் சூட்டப்படும்.

  பொதுமக்களின் வசதிக்காகவும், பணியாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் தோவாளை யூனியன் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். தோவாளை சுற்றுப்புற கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் தோவாளையில் இருந்து மாதவலாயம் கிராமச்சாலை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி சுற்றுலா தலத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

  கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படும். விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் 35 கோடி ரூபாய் செலவில் தொங்கு பாலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

  பள்ளிகளை திறப்பது தொடர்பாக நேற்று தான் (அதாவது நேற்று முன்தினம்) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதுஅரசின் ஆய்வில் இருக்கிறது. அரசு உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வின்படி விரைவாக அறிவிக்கப்படும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளில் நல்லநிலையில் உள்ள படகுகளை நமது மீனவர்கள் எடுத்து வந்து விட்டார்கள். எடுத்துவர முடியாத படகுகள் அங்கு நிற்பதாக தகவல் வந்திருக்கிறது. அங்குள்ள நீதிமன்றம், அவற்றை எடுத்துச்செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அழிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

  ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரம் வேறு, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வேறு. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பிரச்சினையில் சட்டசிக்கல் உள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் அரசினுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உள்ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளோம்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து விதமான நோய்களின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து ஆய்வறிக்கை உள்ளது. அதை அரசு பார்க்கும். அதன்படி குமரி மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருந்தால் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும்.

  நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சினை குறித்து நாங்கள் ஏற்கனவே கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை 2, 3 கட்டங்களாக நடந்து வருகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலவரங்களை எல்லாம் கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம். இதுமட்டுமல்ல இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி பிரச்சினைகளை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

  தனியார் வன பாதுகாப்புச் சட்டம் குறித்து அரசு பரிசீலனையில் இருந்து வருகிறது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தொடர்பான அங்குள்ள மீனவர்கள், அருட்பணியாளர்கள் வந்து என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்பதை தெரிவித்திருக்கிறேன்.

  சென்னை மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, அந்த பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வந்தபோது அவரிடம் இதுதொடர்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். அந்தப்பணி விரைவில் தொடங்கப்படும்.

  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  News