ஐரோப்பிய நாடுகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த ஆர்டிக் பனி பறவை
Views - 15 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் பரந்து விரிந்த குளம் உள்ளது.
இந்த குளத்தின் நடுவே அடர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் எப்போதும் இதமான சீதோஷ்ணம் நிலவும். இதனால் இங்கு எப்போதும் பறவைகள் கூட்டம் நிறைந்திருக்கும்.
குறிப்பாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து அரியவகை பறவைகள் இங்கு வந்து தங்கி இருக்கும்.
அந்த வகையில் தற்போது இக்குளத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆர்டிக் பனி பிரதேசத்தை சேர்ந்த பனிப்பறவைகள் இங்கு வந்து தங்கி உள்ளது. இது மிகவும் சிறிய பறவையாகும். இது பற்றி பறவை ஆர்வலர் டேவிட்சன் கூறியதாவது:-
ஆர்டிக் பகுதிகளில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கடும் பனி நிலவுவதால் அப்பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளிலும் பனிக்காலம் ஆரம்பித்துவிடுகின்றது. எனவே பறவைகளுக்கு போதிய உணவு கிடைப்பது மிக அரிதாகிவிடுறது.
ஆகவே அங்கு வாழ்கின்ற பறவைகள் மிதமான தட்ப வெப்ப நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன. செப்டம்பர் முதல் நவம்பர் இறுதிவரை இப்பறவைகள் இந்தியா போன்ற சீரான தட்பவெப்ப நாடுகளுக்கு வருகின்றன. இவ்வாறு இடம்பெயர்ந்து வருகின்ற பறவைகளின் பட்டியலில் கொசு உள்ளான் என்ற மிகச்சிறிய பறவையும் உள்ளது.
இப்பறவை குமரி மாவட்டத்தின் மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதிக்கு இவ்வாண்டு வந்துள்ளது. இங்கு வரும்போது இப்பறவையின் எடை 16 கிராம் மட்டுமே இருக்கும். இவை தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி போகின்ற போது அதன் எடை 26 கிராமாக அதிகரித்து இருக்கும் என பறவை விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் கிரெப் தனது ஆய்வின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதியில் பறவைகளுக்கு தேவையான மீன், நண்டு, புழுக்கள், நீர் தாவரங்கள் கிடைப்பதால் இப்பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. வடகிழக்கு பருவமழை செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பெய்வதால் பறவைகளுக்கு போதிய உணவு இம்மாவட்டத்தில் கிடைக்கின்றது.
குமரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் போது நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிடும். அச்சமயம் ஆர்டிக் பகுதியில் உள்ள மேலைநாடுகளல் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும். அப்போது பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்பறவைகளின் இடப்பெயர்ச்சி உலக அளவில் நடைபெறும் நிகழ்வாகும்.
கொசு உள்ளான் பறவைகள் சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து குமரி மாவட்டத்திற்கு வருகின்றன. குமரி மாவட்டத்தை நம்பி உணவு, பாதுகாப்பு தேடி வருகின்ற இப்பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பது, அவற்றை அச்சுறுத்துவது, அதன் வாழ்விடத்தை அழிப்பது அல்லது வேட்டையாடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். வனத்துறை போதிய கவனம் செலுத்தி வேட்டையாடுதலை தடுத்து பறவைகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
News