" Every moment is a fresh beginning."

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?

Views - 126     Likes - 0     Liked


 • அடிலெய்டு,
   
  ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் கால்பதிப்பது இது 13-வது முறையாகும். இதுவரை இந்திய அணி அங்கு சாதித்தது என்ன என்பதை பார்ப்போம்.
  1947-48-ம் ஆண்டு (ஆஸ்திரேலியா வெற்றி 4-0)
   
  இது தான் இந்தியாவின் முதல் ஆஸ்திரேலிய பயணம். ஓவருக்கு 8 பந்து அடிப்படையில் நடந்த இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு லாலா அமர்நாத்தும், ஆஸ்திரேலிய அணிக்கு பிராட்மேனும் கேப்டனாக இருந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் (டிரா ஆனது) தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதில் மூன்று இன்னிங்ஸ் தோல்வியும் அடங்கும். ஆஸ்திே-லியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை வினோ மன்கட் (116 ரன்) பெற்றார். பிராட்மேன் 4 சதம் உள்பட மொத்தம் 715 ரன்கள் குவித்தார்.
   
  இதில், சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் போது இந்திய வீரர் வினோ மன்கட் புதுமையான சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது எதிர்முனையில் நின்ற பில்லி பிரவுன் பந்து வீசப்படுவதற்கு முன்பே கிரீசை விட்டு நகர்ந்து செல்வதை கவனித்த மன்கட் பந்து வீசுவது போல் ஓடிவந்து விட்டு திடீரென ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டிவிட்டு ரன்-அவுட் கேட்டு அப்பீல் செய்தார். அந்த சமயம் பில்லி பிரவுன் கிரீசை விட்டு வெளியே நின்றதால் ரன்-அவுட் வழங்கப்பட்டது. இது உண்மையான விளையாட்டுக்குரிய செயல் அல்ல என்று அங்குள்ள ஊடகங்கள் சாடின. ஆனால் பிராட்மேன் விதிமுறைப்படி இது சரியே என்று மன்கட் செயலை ஆதரித்தார். இந்த சம்பவத்துக்கு பிறகே இந்த மாதிரியான ரன்-அவுட் செய்யப்படுவது ‘மன்கட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.
   
  1967-68-ம் ஆண்டு (ஆஸ்திரேலியா வெற்றி 4-0)
   
  மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்டுகளிலும் சரணாகதி அடைந்தது. இதில் பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்டில் மட்டும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது. இதில் 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 355 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
   
  1977-78-ம் ஆண்டு (ஆஸ்திரேலியா வெற்றி 3-2)
   
  பிஷன்சிங் பெடி தலைமையிலான இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், வெங்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், மொகிந்தர் அமர்நாத் என தலைச்சிறந்த வீரர்கள் அங்கம் வகித்தனர். முதல் இரு டெஸ்டுகளில் முறையே 16 ரன் மற்றும் 2 விக்கெட் என்று நூலிழை வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. இதில் இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடி ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. சுழற்பந்து வீச்சாளர் பி.எஸ். சந்திரசேகர் இரு இன்னிங்சிலும் ஒரே மாதிரி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து தலா 6 விக்கெட் வீழ்த்தி வியப்பூட்டினார். சிட்னியில் நடந்த அடுத்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய அடிலெய்டில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி 493 ரன்கள் இலக்கை நெருங்கி வந்து (445 ரன்னில் ஆல்-அவுட்) கோட்டை விட்டது.
   
  1981-ம் ஆண்டு (தொடர் சமன் 1-1)
   
  3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றாலும் மெல்போர்னில் நடந்த கடைசி டெஸ்டில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் தப்பித்தது. இதன் 2-வது இன்னிங்சில் கிரேக் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலியாவை இந்திய பவுலர்கள் வெறும் 83 ரன்னில் அடக்கினர். கபில்தேவ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த நாள் வரைக்கும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மோசமான ஸ்கோராக நீடிக்கிறது.
   
  இந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய கேப்டன் கவாஸ்கர் 70 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, டென்னிஸ் லில்லியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் பந்து பேட்டில் உரசிய பிறகே காலுறையில் பட்டதாக வாதிட்ட கவாஸ்கர் வெளியேற மறுத்து வாக்குவாதம் செய்தார். கோபத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சேத்தன் சவுகானை அழைத்து கொண்டு வெளியேற முயற்சித்தார். உடனே அணியின் மேலாளர் ஷகித் துரானி சமாதானப்படுத்தி சேத்தன் சவுகானை தொடர்ந்து விளையாட வைத்தார். ஒருவேளை அவரும் வெளியேறி இருந்தால் இந்த டெஸ்டில் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த சம்பவத்தை அடிக்கடி நினைவு கூறும் கவாஸ்கர், அவுட்டோ, இல்லையோ ஒரு கேப்டனாக நான் அவ்வாறு நடந்திருக்கக்கூடாது. அதனால் இன்னும் வருந்துகிறேன் என்று சொல்வார்.
   
  1985-86 (தொடர் சமன் 0-0)
   
  கபில்தேவ் தலைமையில் களம் இறங்கிய இந்தியா மூன்று டெஸ்டிலும் டிரா கண்டது. இதில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களான கவாஸ்கர் (172 ரன்), ஸ்ரீகாந்த் (116 ரன்), மொகிந்தர் அமர்நாத் (138 ரன்) ஆகியோர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
   
  1991-92 (ஆஸ்திரேலியா வெற்றி 4-0)
   
  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக முகமது அசாருதீன் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 4-ல் தோற்றது. மற்றொரு போட்டி டிரா ஆனது. இளம் வீரராக வந்த சச்சின் தெண்டுல்கர் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் (114 ரன்) சதம் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆஸ்திரேலியாவில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரவிசாஸ்திரி (206 ரன்) பெற்றார். கபில்தேவ் 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதைத் தவிர்த்து இந்தியாவுக்கு இந்த தொடரில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரின் மூலம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு புயல் ஷேன் வார்னே அறிமுகம் ஆனார்.
   
  1999-2000 (ஆஸ்திரேலியா வெற்றி 3-0)
   
  சச்சின் தெண்டுல்கர் தலைமையில் படையெடுத்த இந்திய அணிக்கு மூன்று டெஸ்டிலும் பலத்த அடி விழுந்தது. கேப்டன் தெண்டுல்கரை (ஒரு சதம் உள்பட 278 ரன்) தவிர வேறு எந்த இந்தியர்களும் பெரிய அளவில் தாக்குப்பிடிக்கவில்லை. இந்த தொடரில் தெண்டுல்கரின் எல்.பி.டபிள்யூ. பெருத்த சர்ச்சையை கிளப்பியது. அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் வீசிய ஷாட்பிட்ச் பந்து எகிறி வரும் என்று நினைத்த தெண்டுல்கர் (0) குனிந்தார். ஆனால் தாழ்வாக வந்த பந்து அவரது இடது முழங்கையை தாக்கியது. பந்து கையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை சாய்த்து இருக்கும் என்று கருதிய நடுவர் டேரில் ஹார்பர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இது நடுவரின் முட்டாள்தனமான முடிவு என்று அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
   
  2003-04 (தொடர் சமன் 1-1)
   
  சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலாவது இன்னிங்சில் 233 ரன்கள் குவித்த டிராவிட், 2-வது இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து 230 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு வித்திட்டார். சிட்னி டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 241 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரில் மொத்தம் 619 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் ராகுல் டிராவிட் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
   
  2007-08 (ஆஸ்திரேலியா வெற்றி 2-1)
   
  ஆஸ்திரேலிய பயணத்தில் மறக்க முடியாத தொடர்களில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சை இந்திய வீரர் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் குரங்கு என்று திட்டியதாக சர்ச்சை வெடித்தது. ஹர்ஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் தொடரை புறக்கணிக்கப்போவதாக இந்திய தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்பீலுக்கு பிறகு ஹர்பஜன்சிங் அபராதத்துடன் தப்பினார். நடுவர்களின் சில மோசமான தீர்ப்புகள் இந்தியாவுக்கு பாதகமாக மாறியது. இதற்கு மத்தியில் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் அரங்ககேறிய 3-வது டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்திய அணிக்கு கும்பிளே கேப்டனாக செயல்பட்டார்.
   
  2011-12 (ஆஸ்திரேலியா வெற்றி 4-0)
   
  உலக கோப்பையை வென்ற கையோடு டோனியின் தலைமையில் சென்ற இந்திய அணி 4 டெஸ்டிலும் உதை வாங்கியது. 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் (329 ரன்), இன்னொரு டெஸ்டில் டேவிட் வார்னர் 69 பந்துகளில் சதம் என்று தெறிக்க விட்டனர். ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய தெண்டுல்கர் 2 அரைசதம் உள்பட 287 ரன்கள் எடுத்தார்.
   
  2014-15 (ஆஸ்திரேலியா வெற்றி 2-0)
   
  இந்த தொடரின் பாதியில் டோனி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் கடைசி டெஸ்டுக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். பேட்டிங், கேப்டன்ஷிப் இரண்டிலும் ஆக்ரோஷத்தை காட்டிய கோலி, கேப்டனாக ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்தார். இதனால் நிலைகுலைந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தொடர் முழுவதும் உணர்ச்சி வசப்பட்டனர். வெற்றியை ஹியூக்சுக்கு அர்ப்பணித்தனர். முதல் இரு டெஸ்டில் தோற்ற இந்தியா கடைசி இரு டெஸ்டில் டிரா கண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவன் சுமித் 4 சதத்துடன் 769 ரன்களும், இந்திய தரப்பில் விராட் கோலி 4 சதத்துடன் 692 ரன்களும் குவித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினர்.
   
  2018-19 (இந்தியா வெற்றி 2-1)
   
  ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைத்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்தியாவுக்கு அனுகூலமாக அமைந்தது. அடிலெய்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. மற்றொரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. சிட்னி போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷாப் பண்ட் பெற்றார். 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்த இந்திய வீரர் புஜாரா தொடர் நாயகனாக பிரகாசித்தார்.

   
  News