" Only I can change my life."

3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: சிட்னியில் 42 ஆண்டு கால சோகத்துக்கு முடிவு கட்டுமா இந்திய அணி?

Views - 102     Likes - 0     Liked


 • சிட்னி, 
   
  ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
  இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா திரும்பியுள்ளதால் மயங்க் அகர்வால் கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது. உமேஷ் யாதவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி ஆகியோரில் ஒருவர் இறக்கப்படுவார். ஆஸ்திரேலிய அணியும் சில மாற்றங்களுடன் களம் இறங்குகிறது. தொடரில் முன்னிலை வகிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் சிட்னி டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு இந்த டெஸ்ட் ஆரம்பிக்கிறது.
   
  ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டிங்குக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் உகந்த ஒரு மைதானம் எதுவென்றால் அது சிட்னி தான். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் டாப்-2 இடங்களில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷேன் வார்னே (64 விக்கெட்), ஸ்டூவர்ட் மெக்கில் (53 விக்கெட்) ஆகியோர் இருப்பதே இதற்கு சான்று. எனவே இந்த டெஸ்டில் இந்திய சுழல் சூறாவளி அஸ்வினும், ஆஸ்திரேலிய சுழல்புயல் நாதன் லயனும் பிரதான அஸ்திரமாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதிலும் லயன் இன்னும் 6 விக்கெட் எடுத்தால் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி சாதனை பட்டியலில் இணைவார்.
   
  இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 108 டெஸ்டில் விளையாடி 60-ல் வெற்றியும், 28-ல்தோல்வியும், 20-ல் டிராவும் கண்டுள்ளது.
   
  இந்திய அணி சிட்னியில் இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும், 6-ல் டிராவும் சந்தித்துள்ளது. அந்த ஒரு வெற்றி 1978-ம் ஆண்டு பிஷன்சிங் பெடி தலைமையில் கிடைத்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இந்திய அணி அங்கு கிரீடம் சூடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடைசியாக அதாவது 2015, 2019-ம் ஆண்டு இந்திய அணி ஆடிய இரு டெஸ்டுகளும் டிராவில் முடிந்துள்ளன. கடந்த சீசனில் புஜாரா, ரிஷாப் பண்ட் ஆகியோர் இங்கு சதம் அடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
   
  2004-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டில் இந்திய அணி 705 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதே டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 241 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாக இது நீடிக்கிறது.
   
  ஆஸ்திரேலிய வீரர்களின் ரன்வேட்டையும் இங்கு அதிகம் உண்டு. கடந்த ஆண்டு சிட்னியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மார்னஸ் லபுஸ்சேன் இரட்டை சதமும், வார்னர் சதமும் விளாசியது நினைவு கூரத்தக்கது.
   
  News