"மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்" - பள்ளிக் கல்வித்துறை
Views - 327 Likes - 0 Liked
-
சென்னை,கொரோனா தொற்றால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கின்றன.இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வந்தது.இதைத்தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்து கூறியிருந்த கருத்துகளின்படி, தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஷெனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு அறைக்குள் 25 மாணவர்களே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.News