" Love For All, Hatred For None."

கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்’ - இந்திய வீரர் நடராஜன் பேட்டி

Views - 97     Likes - 0     Liked


 • சேலம்,
   
  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துல்லியமாக யார்க்கர் போட்டு மிரட்டிய தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அதன் பிறகு வலை பயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் காயமடைந்ததால் சர்வதேச போட்டியில் களம் காணும் வாய்ப்பை பெற்றார். ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் என்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஒரே தொடரில் கால்பதித்து சாதனை படைத்த நடராஜன் மொத்தம் 5 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
   
  சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய போது சொந்த ஊரில் சாரட்வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர் நடராஜன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
  அப்போது அவர் கூறியதாவது:-
   
  ஆஸ்திரேலியாவில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய எனக்கு சொந்த ஊரில் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு வரவேற்பு அளித்த ஊர் மக்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கும், சேலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த கனவு தற்போது நனவாகி வருகிறது.
   
  ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் என 3 விதமான போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் ஆவேன் என எதிர்பார்க்கவே இல்லை. இந்திய அணிக்காக விளையாடியது, விக்கெட் வீழ்த்தியது எல்லாமே கனவு போன்று இருந்தது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
   
  இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத்தர வேண்டும் என உழைத்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது. இது கடவுள் கொடுத்த வரம். இதனால் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
   
  இந்திய அணியின் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உறுதுணையாக இருந்தனர். விராட் கோலி, ரஹானே இருவருமே என்னை சிறப்பாக கையாண்டனர். அவர்கள் எனக்கு நம்பிக்கைவூட்டி ஊக்கப்படுத்தினர். இருவரின் கேப்டன்ஷிப்பிலும் உற்சாகமாக ஆடினேன்.
   
  எனது கடின உழைப்பை மட்டுமே தொடர்ந்து செலுத்தினேன். அதற்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றவுடன் கேப்டன் விராட்கோலி என்னிடம் கோப்பையை வழங்குவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் மிகப்பெரிய ஜாம்பவான். அவர் கோப்பையை பெற்று எனது கையில் கொடுத்ததும் என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துவிட்டது. அந்த தருணம் நெகிழ வைத்தது.
   
  எனக்கு மகள் பிறந்த ராசியோடு ஜொலிக்க போகிறாய் என ஆஸ்திரேலியா வீரர் வார்னர் ஏற்கனவே வாழ்த்தினார். இப்போதும் அவர் என்னை பாராட்டியது சந்தோஷமாக உள்ளது. எனது குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி. ஒரே சிந்தனையுடன், கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நானே உதாரணம்.
   
  இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து கடந்த 4 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதால் அந்த அனுபவம் சக வீரர்களுடன் தொடர்புக்கு உதவிகரமாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் பேசி பழகுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. போக போக விஷயங்களை புரிந்து கொண்டேன். இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு.
   
  சிறுவயதில் வீட்டில் டி.வி. எதுவும் இல்லை. ஊரில் சும்மா கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பேன். டென்னிஸ் பந்தில் தான் அதிகமாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அதில் கோப்பை வாங்குவது எனக்கு பிடிக்கும். அது தான் எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. எனவே, கிராமப்புற இளைஞர்கள் கடினமாக உழைத்தால் வெற்றிபெறலாம். கடின உழைப்பிற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும். எனக்கு மிகவும் பிடித்த வீரர் சச்சின் தெண்டுல்கர். யார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
   
  எனது பலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதையே எப்போதும் வெளிப்படுத்துவேன். ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி ஒட்டுமொத்த வெற்றியாகும். சமூகவலைதளங்களில் ஒவ்வொரு நபரும் தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து பாராட்டியதற்கு நன்றி.
   
  இவ்வாறு நடராஜன் கூறினார்.
   
  பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகா‌‌ஷ், செயலாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
  News