" Love For All, Hatred For None."

இந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 9 ஆயிரமாக குறைந்தது

Views - 87     Likes - 0     Liked


  • புதுடெல்லி,
     
    உலகை இன்றளவும் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தை நமது நாடு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
     
    அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் எல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளை அந்த கொடிய வைரசின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவும், உயிர்ப்பலிகளை குறைக்கவும் திணறி வருகின்றன. ஆனால் இந்தியா இவை அனைத்திலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் சாதித்து வருகிறது.
     
    ஒரு கட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நாளில் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்தது. இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து செல்லும் என்றும் அஞ்சப்பட்டது. ஆனால் அந்த நிலைக்கு செல்லாமல் கொரோனாவுக்கு கடிவாளம் போட்டது, இந்தியா.
     
    தற்போது தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள்ளே வைக்கப்பட்டு வருவது சாதனைதான். அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாட்டில் புதிதாக 9 ஆயிரத்து 102 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. 8 மாதங்களில் இந்த அளவுக்கு குறைவான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
     
    கடைசியாக கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி ஒரு நாள் பாதிப்பு 8,909 ஆக இருந்தது நினைவுகூரத்தக்கது.
     
    இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 76 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.
     
    நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக 15 ஆயிரத்து 901 பேர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் 5,606 பேர் கொரோனாவில் இருந்து ஒரு நாளில் குணம் அடைந்தனர். அதற்கு அடுத்தபடியாக மராட்டிய மாநிலத்தில் 3,080 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
     
    இந்தியாவில் இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 985 பேர் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து கொரோனா மீட்பு அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
     
    நாட்டின் கொரோனா மீட்பு விகிதம், 96.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
     
    கொரோனா சிகிச்சை பலனற்றுப்போய் நேற்று ஒரு நாளில் 117 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த மே மாதம் 16-ந்தேதியன்று 103 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். அதன்பிறகு இந்த அளவுக்கு குறைவான இறப்பு பதிவாகி இருப்பது நேற்றுதான்.
     
    பலியான 117 பேரில், மராட்டிய மாநிலத்தவர் 30 பேர் அடங்குவார்கள். கேரளாவில் 17 பேரும், சத்தீஷ்காரில் 13 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
     
    இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை, 1 லட்சத்து 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மராட்டிய மாநிலம்தான் உயிர்ப்பலியில் முதல் இடம் வகிக்கிறது. அங்கு இதுவரை 50 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கர்நாடகம் 12 ஆயிரத்து 200 பேரை பலிகொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.
     
    இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக நீடிக்கிறது.
     
    இந்தியாவில் கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து 7-வது நாளாக நேற்று 2 லட்சத்துக்குள் இருக்கிறது. மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 266 பேர் கொரோனா மீட்புக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக 70 ஆயிரத்து 859 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மராட்டியத்தில் 44 ஆயிரத்து 789 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
     
    இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் விகிதம், 1.66 சதவீதம் மட்டும்தான் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
     
    இதற்கிடையே நேற்று முன்தினம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 577 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 19 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 694 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
     
    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் இறுதிவெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பது பெருத்த நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
    News