" Early to bed and early to rise, makes a man healthy, wealthy and wise.”"

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்- படகு போக்குவரத்து 2வது நாளாக ரத்து

Views - 15     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி கடலில் 2வது நாளாக இன்றும் சூறைகாற்று வீசியதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சூறைகாற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து ஆக்ரோ‌ஷமாக அடித்தன.

    கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    கடல் அலைகள் ஆக்ரோ‌ஷமாக அடித்தபடி இருந்ததால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் 2-வது நாளாக இன்றும் சூறைகாற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 10 முதல் 15 அடி உயரம் வரை எழுந்து கரையில் இருந்த பாறைகளில் மோதியது.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க இன்றும் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது.

    வள்ளம் மற்றும் கட்டு மர மீனவர்கள் இன்றும் கடலுக்குச் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு செயல்படும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    News