கூட்டுறவு வங்கியில் பெண்கள் முற்றுகை
Views - 7 Likes - 0 Liked
-
தென்தாமரைகுளத்தில் விவசாய கடனுக்கு கட்டிய பணத்தை திருப்பி தர வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டுறவு வங்கி முன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு உட்பட்ட வங்கி, அதே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களான ஆண்டிவிளை, தென்தாமரைகுளம், விஜயநகரி, தேரிவிளை, காட்டுவிளை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த வங்கியில் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய கடன் பெற்றுள்ளனர். அந்த கடன்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்- அமைச்சரின் அறிவிப்பை கேட்டு ஏற்கனவே கடனை கட்டி முடித்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தென்தாமரைகுளம் வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு திரண்டனர்.
அப்போது அவர்கள், தாங்கள் கட்டிய விவசாய கடன் தொகையை திருப்பி தரக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் தலைமையிலான போலீசார் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த பெண்கள் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் நாங்கள் கடன் தொகையை கட்டி முடித்து 10 நாட்களுக்குள் புதிய கடன் தருவார்கள். ஆனால், தற்போது எங்களிடம் இருந்து கடனை வசூலித்து 3 மாதங்கள் ஆகியும் புதிதாக கடன் தரவில்லை. முறைப்படி எங்களுக்கு கடன் தந்திருந்தால் எங்கள் கடனும் தள்ளுபடி ஆகியிருக்கும். எனவே, நாங்கள் கட்டி முடித்த கடன் தொகையை எங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றனர்.
கூட்டுறவு சங்க தலைவர் வலிய பெருமாள் அரசு மற்றும் போலீசார், அவர்களின் கோரிக்கைகளை எழுத்து மூலமாக எழுதிக் கொடுங்கள், நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். அதைதொடர்ந்து பெண்கள் நாளை (புதன்கிழமை) மனுவாக எழுதி கொண்டு வருவதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.கூட்டுறவு வங்கி முன் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News