" “The best preparation for tomorrow is doing your best today.”"

பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,092 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

Views - 37     Likes - 0     Liked


  • கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,092 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழ வேண்டியும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் தடைபட்டது.
     
     
     இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டதையொட்டி கோவில் திருவிழா கடந்த 9-ந் தேதி தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தூக்ககாரர்களின் நமஸ்காரம், வண்டியோட்டம் போன்றவை நடந்தன.
     
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் தூக்கக்காரர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து முட்டுகுத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து அம்மன் கோவில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினார். பின்னர் தொடக்க நிகழ்ச்சியாக 4 அம்மன் தூக்கம் நடந்தது. தூக்கக்காரர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளிகள் குத்தி கச்சேரிநடையில் உள்ள தறவாடு வீட்டுக்கு சென்று, அங்கிருந்து வீரவாள் பெற்று ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
    பின்னர், சுமார் 45 அடி உயர தூக்க வில்லில் 4 தூக்கக்காரர்கள் கட்டப்பட்டு அவர்களின் கைகளில் பச்சிளம் குழந்தைகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தூக்க வில் மேலே உயர்த்தப்பட்டது.  பக்தர்கள் தூக்கவில்லின் வடத்தை பிடித்து இழுத்தபடி கோவிலை ஒருமுறை சுற்றி வந்தனர். அப்போது குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் தூக்க வில்லின் உச்சியை பயபக்தியுடன் கும்பிட்டபடி அம்மனை வேண்டினர்.
     
    இவ்வாறு 1,092 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. நேற்று காலையில் தொடங்கிய தூக்க நேர்ச்சை இரவு வரை நீடித்தது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம் குமார், துணை செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ண குமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.
    News