" “If opportunity doesn't knock, build a door.”"

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தநாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் நாகர்கோவில் பிரசாரத்தில் சீமான் பேச்சு

Views - 237     Likes - 0     Liked


  • பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே கொள்கை உடையவைதான். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்.

    குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக நாம ்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு இது வழக்கமான தேர்தல் களம். எங்களுக்கு இது புரட்சிகர போர்க்களம். அவர்கள் தேர்தலாக பார்க்கிறார்கள். நாங்கள் இதை மாறுதலாக பார்க்கிறோம். எங்கள் கட்சி பதவிக்கானது அல்ல. என் மக்களின் உதவிக்கானது. எங்களின் அரசியல் பணத்திற்கானது அல்ல. எங்களின் இனத்திற்கானது.
     
    குமரி மாவட்டத்தில் மத அரசியல்தான் எடுபடும். அதனால் அவர்கள் ஒன்று காங்கிரசில் இருப்பார்கள், இல்லையென்றால் பா.ஜனதாவில் இருப்பார்கள் என்று பயம் காட்டினார்கள் என்னை. இந்த படையைப் பார்த்து அவர்கள் தான் பயந்து ஓடி இருப்பார்கள். குமரி மாவட்டம் தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். படித்த இளைஞர்களாகிய உங்களை நம்பித்தான் இந்த புரட்சிகர அரசியலை முன்னெடுத்து இருக்கிறேன்.எப்படிப்பட்ட மாறுதல்களைக் கொண்டுவர நினைக்கிறோமோ, அந்த மாற்றத்தை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். நமக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாவிட்டால் நம்மால் எந்த சமுக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அதனால் மாறுவோம், மாற்றுவோம். அந்த மாறுதலுக்கான நாள்தான் ஏப்ரல் 6-ந் தேதி.
     
    நாடாளுமன்றத்தில் இங்கு காங்கிரசும், பா.ஜனதாவும் போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் தமிழகத்துக்கு எதற்கு? இவர்கள் எதற்காக நம்முடன் நின்றார்கள்? நிற்பார்கள்? இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். ஒரே கொள்கைதான். பொருளாதார கொள்கையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் ஆகியவற்றில் ஒரே கருத்தைக் கொண்டவர்கள்.
     
    வெளியுறவுக்கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, நாட்டின் பாதுகாப்பு கருவி உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தியில் நூறு சதவீதம் அன்னிய முதலீடு என இரண்டு கட்சிக்கும் ஒரே கொள்கைதான். கல்வி கொள்கையிலும் அதேதான். இரண்டு பேருக்கும் ஒரே கொள்கைதான் இந்தியாவை சீக்கிரம் விற்றுவிட்டு யார் முதலில் கல்லா கட்டுவது என்பதுதான். இரண்டு கட்சிக்கும் உள்ள ஓரே கொள்கை.
     
    எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள். எல்லாம் தனியார் மயம் என்றால் அரசின் வேலைதான் என்ன? அரசுக்கு தரகு வேலை பார்ப்பதும், கமிஷன் வாங்குவதுமாகத்தான் இருக்கிறது. பா.ஜனதா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று அறிவித்துள்ளது. முன்னேறிய சாதியினருக்கு, முன்னேறிய வகுப்பினருக்கு எதற்கு பொருளாதார ரீதியில் இட ஒதுக்கிடு கொடுக்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு சாதியும், மதமும் இரண்டு கண்களாக இருக்கின்றன. இந்த கோட்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    நாங்கள் இருக்கிறவரை குமரி மாவட்டம் இனயத்தில் சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுகம் வராது. நான் இந்த தேர்தலில் எனது சொந்த ஊரான காரைக்குடியில் நிற்கலாம். ஆனால் எதற்காக திருவெற்றியூர் தொகுதியில் நிற்கிறேன் என்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்டுவதற்கு அதானிக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்காகத்தான்.
     
    இவர்கள் சாமிக்கு அரசியல் செய்கிறார்கள். நாம் வாழும் பூமிக்கு அரசியல் செய்ய மாட்டார்கள். மாநில அரசுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் உரிமை இல்லாமல் போய்விட்டது. இந்தியாவை ஆண்ட பா.ஜனதா, காங்கிரசால் என்ன நடந்தது. ஒன்றும் இல்லை. சகிக்க முடியாத ஊழலால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. இவர்களை மாற்ற வேண்டும். இதற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
     
    இலவசம் என்ற பெயரில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் நம்மை பிச்சைக்காரர்களாக்கி வருகிறார்கள். இந்த இழிநிலையில் இருந்து தமிழ்ச்சமூக மக்கள் தன்மானத்தோடு எழுந்து வெளியே வரவேண்டும். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற எண்ணம் இருக்கிற வரை மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வராது. அதை நாம் மாற்ற வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்து இந்த தருணத்தை விட்டுவிட்டால் புதிய அரசியல் பிறக்காது. எனவே குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு சீமான் பேசினார்.
     
    கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அனிட்டர் ஆல்வின், சட்டசபை தொகுதிகளின் வேட்பாளர்கள் சசிகலா (கன்னியாகுமரி), விஜயராகவன் (நாகர்கோவில்), சீலன் (பத்மநாபபுரம்), ஆன்றனி ஆஸ்லின் (குளச்சல்), பீட்டர் (கிள்ளியூர்), மேரி ஆட்லின் (விளவங்கோடு) மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    News