‘பேட்டிங், பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறோம்’ - கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் புலம்பல்
Views - 271 Likes - 0 Liked
-
ஆமதாபாத்,14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 154 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக சுப்மான் கில் 43 ரன்னும், ஆந்த்ரே ரஸ்செல் ஆட்டம் இழக்காமல் 45 ரன்னும் எடுத்தனர்.பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 82 ரன்கள் குவித்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘பிரித்வி ஷாவிடம் இயல்பான ஆட்டத்தை விளையாடும் படி கூறினேன். இந்த ஆட்டத்தின் முடிவில் நாங்கள் ரன்ரேட்டை உயர்த்த முயற்சித்தோம். இதுபோன்ற ஆட்டங்களில் தான் நிகர ரன்ரேட்டை பற்றியெல்லாம் யோசிக்க முடியும். ஏனெனில் ஆட்டம் 12-13-வது ஓவரிலேயே ஏறக்குறைய முடிந்து விட்டது. ஆட்டத்தை ரசித்து உங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துங்கள் என்று தான் நாங்கள் எப்போதும் வீரர்களிடம் சொல்வோம். லலித் யாதவ் ஒரு நல்ல ‘ஆல்-ரவுண்டர்’ என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு இன்னும் பேட்டிங்கில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் நாங்கள் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டோம். இருப்பினும் எங்களது செயல்முறையை மாற்ற வேண்டாம் என்று நினைத்தோம். செயல்முறையை நம்பினால் நீங்கள் எதிர்பார்த்த முடிவை (வெற்றி) பெறுவீர்கள்’ என்றார்.தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் மெதுவாக விளையாடினோம். அத்துடன் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம். இறுதிகட்டத்தில் ரஸ்செல் சிறப்பாக ஆடி அணி 150 ரன்களை கடக்க வைத்தார். ஆனால் நாங்கள் மீண்டும் பந்து வீச்சில் மந்தமாக செயல்பட்டு விட்டோம். இந்த போட்டித் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட முடியாமல் நாங்கள் தடுமாறி வருகிறோம். கடந்த சீசனில் கம்மின்ஸ் தொடக்கத்திலேயே புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசினார். கடந்த ஆட்டத்தில் ஷிவம் மாவி தொடர்ந்து 4 ஓவர்கள் நன்றாக பந்து வீசினார். ஆனால் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. போட்டியில், போகப்போக முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.வீரர்கள் ஓய்வறையில் ஒவ்வொருவரிடமும் நீங்கள் நேர்மையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நீங்கள் கெடுதல் செய்வதாக தான் அர்த்தமாகும். எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. திறமைகள் உங்களை இந்த நிலைமை வரை தான் கொண்டு வரும். திறமையை களத்தில் நீங்கள் செயல்திறனாக மாற்ற வேண்டியது அவசியமானதாகும்.’ என்றார்.News