மேகதாது அணை விவகாரம்: மத்திய மந்திரியை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்
Views - 213 Likes - 0 Liked
-
புதுடெல்லி,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி சென்றார். மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அவர் இன்று சந்திக்கிறார்.தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய மந்திரியை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.சென்னையில் இருந்து காலை 10.50 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் டெல்லி விமான நிலையத்தில் இறங்கி, பகல் 2 மணி அளவில் டெல்லியில் உள்ள தமிழக அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.இதனைத்தொடர்ந்து துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 2 மணிக்கு மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குறித்து மத்திய மந்திரியிடம் விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இன்றும் டெல்லியில் தங்கும் துரைமுருகன், நாளை (புதன்கிழமை) பகல் 1.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.News