டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய மந்திரிகளுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
Views - 246 Likes - 0 Liked
-
புதுச்சேரி,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார்.இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிதாக 15 மந்திரிகள், 28 இணை மந்திரிகள் பதவியேற்று கொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள மத்திய மந்திரிகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுபற்றி, தெலங்கானாவின் கவர்னர் மற்றும் புதுச்சேரியின் கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர்களாக புதிதாகப் பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம் பாரதத் திருநாடு, உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கும் நம் தாய்த் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும் நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைகோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி.அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டுக்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கவும் அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.News