" “If opportunity doesn't knock, build a door.”"

போபண்ணா, சானியா குற்றச்சாட்டுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் கண்டனம்

Views - 250     Likes - 0     Liked


  • புதுடெல்லி, 
     
    டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா இணை தகுதி பெற்று இருக்கிறது. சில வீரர்கள் விலகியதை அடுத்து இந்திய வீரர் சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் அடித்தது. ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் இரட்டையர் பிரிவில் தான் தகுதி பெறும் விஷயத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று உலக இரட்டையர் தரவரிசையில் 41-வது இடம் வகிக்கும் ரோகன் போபண்ணா குற்றம் சாட்டினார். 
    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இரட்டையர் பிரிவுக்கு என்னையும், சுமித் நாகலையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரை செய்ததை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பரிந்துரை காலக்கெடுவுக்கு (ஜூன் 22-ந் தேதி) பிறகு காயம் மற்றும் உடல்நலக்குறைவு தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் செய்யப்படும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெளிவாக தெரிவித்து இருக்கிறது. 
     
    இருப்பினும் இந்த விஷயத்தில் வீரர்கள், அரசு உள்பட அனைத்து தரப்பினரையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்துகிறது’ என்று கூறியிருந்தார். முதலில் இரட்டையர் பிரிவுக்கு ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி பெயர் சிபாரிசு செய்யப்பட்டு பிறகு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     
    போபண்ணாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா ‘இது உண்மையாக இருந்தால் வெட்கக்கேடானது. நாங்கள் திட்டமிட்டபடி கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட முடியாமல் போனதால் பதக்கம் வெல்லும் நல்ல வாய்ப்பை தியாகம் செய்வதாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
     
    போபண்ணா, சானியா ஆகியோரின் புகாருக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது. அதன் டுவிட்டர் பதிவில், ‘போபண்ணா, சானியா ஆகியோர் உண்மை நிலவரம் தெரியாமல் முறையற்ற கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. அவர்கள் சர்வதேச டென்னிஸ் சங்க விதிமுறைகளை சரியாக படித்து பார்க்க வேண்டும். அவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கண்டனத்துக்குரியதாகும். ரோகன் போபண்ணாவின் தரவரிசை திவிஜ் சரண் அல்லது சுமித் நாகலுடன் இணைந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு போதுமானதாக இல்லை. எந்தவொரு பிரிவிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை எப்படி இழக்க விரும்புவோம். நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் அனில் துபாருடன் பேசிய உரையாடலை பதிவு செய்து போபண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒழுங்குநெறி கமிட்டிக்கு பரிந்துரைக்கப்படும் என்று டென்னிஸ் சங்கம் கூறியுள்ளது.
     

    News