வழிபாட்டு தலங்களில் 3 நாட்கள் பொது மக்களுக்கு தடை; செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டம்
Views - 239 Likes - 0 Liked
-
சென்னை,தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாக கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தினமும் கூடிவருகிறது.இது கொரோனாவின் 3-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ? என்று எல்லோரும் அச்சமடைந்த நிலையில், 2-வது அலையே இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு வரும் 9-ந் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும்2 வாரத்திற்கு நீட்டிப்பது என்றும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6-8-2021 அன்று (நேற்று) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்து வருகிறது.மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வி துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், இந்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதியில் இருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.அதாவது, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதாவது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும். கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுத்திட முன்மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான உறுதிமொழியினை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு சொல்லிலும், செயலிலும் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும், கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.News