" “If opportunity doesn't knock, build a door.”"

விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.12 கோடியில் கலையரங்கம்

Views - 238     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி, 
    கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலையரங்கத்தை நாளை மறுநாள் கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார்.
    கலையரங்கம்
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 44 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடியில் நன்கொடையாளர்கள் மூலம் மிகப்பிரமாண்டமான கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி குளச்சல் எஸ்.சி. கன்ஸ்ட்ரக்‌ஷன் சார்பில் அதன் உரிமையாளர்கள் சி.முருகேசன், எம்.நிஷாந்த் ஆகியோர் மேற்பார்வையில் இரவு-பகலாக நடந்து முடிந்தது. இதன் திறப்பு விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைக்கிறார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (புதன்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகிறார். அன்றைய தினம் இரவில் விவேகானந்த கேந்திராவில் ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் விவேகானந்த கேந்திராவில் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் தூத்துக்குடிக்கு சென்று சென்னை செல்ல உள்ளார். கலையரங்க திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத்தும் பங்கேற்க உள்ளார். 
    இதற்கான ஏற்பாடுகளை கேந்திர நிர்வாகிகளான பால கிருஷ்ணன், ஹனுமந்த ராவ், பானு தாஸ், மற்றும் நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    பலத்த பாதுகாப்பு
    கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மோகன் பகவத் ஆகியோர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 
    கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த வகையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குழித்துறை, இரணியல் ஆகிய ரெயில் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். மேலும் விழா நடைபெற உள்ள விவேகானந்த கேந்திராவிலும் ஆய்வு நடத்தினார்.
     
    News