இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது..!
Views - 154 Likes - 0 Liked
-
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 19.3 ஓவர்களில் 148 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டி ஒன்றில் அரைசதத்துடன், 4 விக்கெட்டும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்ற ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார். ரோகித் சர்மா தலைமையில் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக ருசித்த 13-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அவர் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை தனதாக்கினார். Also Read - சிஎஸ்கே தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கிய ஜடேஜா; அணியில் இருந்து விலகுகிறாரா? வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், 'முதல் பந்தில் இருந்தே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களது பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறந்த ஷாட்களை ஆடினார்கள். பவர்-பிளேயை (முதல் 6 ஓவர்) சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது எப்போதும் முக்கியமாகும். பவர்-பிளேயில் அதிரடியாக ஆடும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனை தான் இந்த போட்டியில் செய்தோம். இந்த மாதிரியான அணுகுமுறைக்கு சில நேரங்களில் பலன் கிடைக்கும். சில நேரங்களில் பலன் கிடைக்காமலும் போகலாம். எந்த வகையில் ஆட்டத்தின் போக்கை அணி கொண்டு செல்கிறது என்பதை ஒட்டுமொத்த பேட்டிங் குழுவும் புரிந்து வைத்து இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் பவுலிங் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் அதனை வருங்காலத்தில் இன்னும் நிறைய செய்ய விரும்புகிறார். அவர் வேகமாக பந்து வீசியதுடன் பந்து வீச்சில் வித்தியாசத்தையும் காட்டினார். Also Read - 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கியது..! அவரது பேட்டிங்கையும் மறந்து விட முடியாது. மின்னொளியின் கீழ் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். இரண்டு தொடக்க பந்து வீச்சாளர்களும் (புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங்) நன்றாக பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். பீல்டிங்கில் நாங்கள் சொதப்பினோம். தவற விட்ட அந்த கேட்ச்களை நாங்கள் பிடித்து இருக்க வேண்டும். அடுத்த போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம்' என்று தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில் 'புதிய பந்தில் அவர்கள் அருமையாக பந்து வீசி எங்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். அந்த அழுத்தத்தில் இருந்து எங்களால் வெளியே வரமுடியவில்லை. 2-வது பாதியில் எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. இந்திய பவுலர்கள் தொடர்ச்சியாக பந்தை ஸ்விங் செய்தனர். புவனேஷ்வர் குமார் எந்த சூழலிலும் பந்தை ஸ்விங் செய்யும் திறன் படைத்தவர். இந்த போட்டியில் வழக்கத்தை விட பந்து அதிக நேரம் ஸ்விங் ஆனது' என்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஆட்டத்தில் இருந்து அணிக்கு திரும்புகிறார்கள். சமீப கால தடுமாற்றத்துக்கு இந்த தொடரிலாவது விராட் கோலி முடிவு கட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News