" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

பெங்களூரு நகரில் போராட்டக்காரர்கள் பயங்கர வன்முறை 40 தமிழக பஸ்கள் தீ வைத்து எரிப்பு 50 லாரிகளும் கொளுத்தப்பட்டன; கடைகள் – ஓட்டல்கள் சூறை

Views - 43     Likes - 0     Liked


 • தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு நகரில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட பஸ்களை தீ வைத்து எரித்தனர். மேலும் 50–க்கும்
  மேற்பட்ட லாரிகளையும் கொளுத்தினார்கள். தமிழர்களின் கடைகள், ஓட்டல்களும் சூறையாடப்பட்டன.

  பெங்களூரு,

  தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டது.

  கர்நாடகத்தில் போராட்டம்

  இதைத்தொடர்ந்து, கடந்த 6–ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்தும் கர்நாடகத்தில் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  இதன் காரணமாக தமிழகம்–கர்நாடகம் இடையே வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து தமிழக பஸ்கள் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்டன. இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டது. 

  பெங்களூருவில் வன்முறை வெடித்தது

  இந்த நிலையில், கர்நாடகத்தின் திருத்தம் கோரும் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் வருகிற 20–ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. அதாவது மேலும் 5 நாட்கள் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் சில தாக்கப்பட்டதை கண்டித்தும் கர்நாடகத்தில் நேற்று போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பெங்களூருவில் காலை 11 மணி அளவில் பயங்கர வன்முறை வெடித்தது.

  பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிடச் சென்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். என்றாலும் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள். இதனால் நகரமே போர்க்களமாக காட்சி அளித்தது.

   தமிழக லாரிகளுக்கு தீவைப்பு

  பெங்களூரு நகரில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அவர்கள் கண்மூடித்தனமாக கற்களை வீசி தாக்கியதோடு, தீ வைப்பிலும் ஈடுபட்டனர். பெங்களூரு மைசூரு ரோடு நாயண்டஹள்ளியில் 6 லாரிகளுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். பெங்களூரு நைஸ் ரோட்டில் 4 லாரிகளுக்கும், ஓசூர் ரோட்டில் ஒரு லாரிக்கும் தீ வைக்கப்பட்டது.

  இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள், லாரிகளில் பிடித்து எரிந்த தீயை அணைக்க சென்றார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் லாரிகளில் பிடித்து எரிந்த தீயை அணைக்க விடாமல் தடுத்தார்கள். அத்துடன் ஒரு சில இடங்களில் தீயணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். இதனால் லாரிகளுக்கு வைக்கப்பட்ட தீயை தீயணைப்பு படைவீரர்களால் அணைக்க முடியவில்லை. அந்த லாரிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

  ஒரே இடத்தில் 25 லாரிகள் எரிந்து நாசம்

  போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் ஆவலஹள்ளி அருகே நியூ டிம்பர்யார்டு லே–அவுட்டில் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த தமிழக பதிவு எண் கொண்ட 25 லாரிகள் எரிந்து நாசமாயின. அந்த லாரிகளின் டீசல் ‘டேங்கர்கள்’ வெடித்ததால், குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. ஒரே இடத்தில் 25 லாரிகளுக்கு தீவைக்கப்பட்டதால், அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்தது.

  மேலும் லாரிகளில் இருந்த சிமெண்டு மூட்டைகள், மருந்துகள், பிற பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீவைத்து எரிக்கப்பட்ட லாரிகள் அனைத்தும் கோகுல்ராஜ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆவலஹள்ளி பகுதியில் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டார்கள்.

   பெங்களூருவில் மட்டும் நேற்று தமிழக பதிவு எண் கொண்ட 40–க்கும் அதிகமான லாரிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

  கடைகள் மீது கல்வீசி தாக்குதல்  

   பெங்களூரு மைசூரு ரோடு, நைஸ் ரோடு, சாம்ராஜ் பேட்டை, அத்திபெலே மற்றும் பெங்களூரு நகரின் பல்வேறு இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட 20–க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கி உடைத்தார்கள். தமிழக பதிவு எண்களை கொண்ட கார்கள், பிற வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். பெங்களூரு தவிர மண்டியா, மைசூரு, சித்ரதுர்கா, உப்பள்ளி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழக பதிவு எண்களை கொண்ட லாரிகள், வாகனங்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கி உடைத்தார்கள்.

  பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டை பகுதிக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் அங்குள்ள தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், ஓட்டல்களை அடித்து நொறுக்கினார்கள். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு சென்று அங்குள்ளவர்களை மிரட்டி, தொழிற்சாலைகளை மூடச் செய்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திறந்திருந்த கடைகள் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்கினார்கள்.

  பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்குள் போராட்டக்காரர்கள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தியதால் அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

  பெங்களூரு சேட்டிலைட் பஸ் நிலையத்தில் தமிழர்கள் நடத்தும் ஓட்டல்களையும், இந்திராநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்களின் ஓட்டல்களையும் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

  40 பஸ்கள் எரிப்பு

  வன்முறை சம்பவங்கள் கட்டுக்கு அடங்காமல் போனதால் பெங்களூரு நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் வன்முறை வெறியாட்டம் ஓயவில்லை.

  பெங்களூரு நைஸ் ரோட்டில் கே.பி.என். ஆம்னி பஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. நேற்று மாலை அந்த பணிமனைக்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு பஸ்களுக்கு தீ வைத்தனர். இதில் சுமார் 40 பஸ்கள் எரிந்து நாசமாயின. ஒரே நேரத்தில் ஏராளமான பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியே நெருப்பு மண்டலமாகவும், புகை மண்டலமாகவும் காட்சி அளித்தது. அந்த பகுதியில் வசிப்பவர்களும் பீதியில் உறைந்து போனார்கள்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயில் சிக்காமல் தப்பிய மற்ற பஸ்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  இந்த சம்பவத்தில் 45 பஸ்கள் தீக்கிரையானதாக கே.பி.என். நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் குவிப்பு

  பெங்களூரு ஸ்ரீராமபுரம், மாகடிரோடு, ராஜாஜிநகர், கே.ஆர்.புரம், அல்சூர் உள்பட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் தமிழ்ச்சங்க அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் கலவர தடுப்பு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

  இதுபற்றி கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்றார்.

  போக்குவரத்து ரத்து

  வன்முறை சம்பவங்கள் காரணமாக பெங்களூருவில் நேற்று பெரும்பாலான இடங் களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் குறைந்த அளவே ஓடின. மாலையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெங்களூருவில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களும் ஓடவில்லை.

   கர்நாடகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான வாகன போக்குவரத்து நேற்று முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும், அவசர, அவசரமாக கர்நாடகத்தில் இருந்து நேற்று தமிழக எல்லையான ஓசூர் கொண்டு வரப்பட்டன. இதேபோல் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஓசூரில் இருந்து கர்நாடகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. தமிழக–கர்நாடக எல்லையில் இரு மாநிலங்களைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

  கொள்ளையடிக்க முயற்சி

  மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் தமிழர்களுக்கு சொந்தமான 6 கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் விரட்டி அடித்தார்கள். தமிழக பதிவெண் கொண்ட ஒரு லாரிக்கு தீ வைக்கப்பட்டதில், அது முற்றிலும் எரிந்து நாசமானது. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.  ஒரு காருக்கும் தீ வைக்கப்பட்டது. மத்தூர் தாலுகா கெஜ்ஜகரே என்ற இடத்தில் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரி தாக்கப்பட்டது.

  மண்டியா நகரில் மாணவர்கள் ஊர்வலமாக சென்று பெங்களூரு–மைசூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதேபோல், ராமநகர் மாவட்டம் சென்னபட்டனாவில் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு துணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தமிழக லாரிக்கு மர்மநபர்கள் தீவைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பெங்களூரு தவிர மண்டியா மாவட்டம் மத்தூரில் தமிழக பதிவு எண்ணை கொண்ட ஒரு காருக்கும், பாண்டவபுரா மற்றும் கொப்பா ஆகிய இடங்களில் தலா ஒரு தமிழக லாரிக்கும் மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தினார்கள். மைசூரு மாவட்டத்திலும் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு கார், 2 லாரிகளுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். இதில் அவை முற்றிலும் எரிந்து நாசமானது.

  சித்ரதுர்கா மாவட்டம் சல்லகரே என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளுடன் சென்று கொண்டிருந்த, தமிழக பதிவெண் கொண்ட லாரி கல்வீசி தாக்கப்பட்டது. இதில் லாரியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள்

  பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 40–க்கும் மேற்பட்ட பஸ்கள், 50–க்கும் மேற்பட்ட லாரிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

  வன்முறை சம்பவங்கள் கட்டுக்கு அடங்காமல் போனதை தொடர்ந்து, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) மந்திரிசபை கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்துகிறார்.

  மைசூரு நகரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  News