" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்..."

முதல்–அமைச்சராக இருந்தபோது நிதி நிலை அறிக்கை பற்றிய விவாதத்தை மருத்துவமனையில் வைத்தே நடத்தினேன்; கருணாநிதி அறிக்கை

Views - 52     Likes - 0     Liked


 • முதல்–அமைச்சராக இருக்கின்ற நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை பற்றிய விவாதத்தை மருத்துவமனையில் வைத்தே நடத்தினேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

  குழப்பம்

  கேள்வி:– அ.தி.மு.க. ஆட்சி என்றால் ‘‘துக்ளக் தர்பார் ஆட்சி’’ என்பதற்கு ஒரு உதாரணம்?

  பதில்:– தீபாவளியை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் 28–10–2016 அன்றே வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28–ந் தேதி அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. வழக்கம் போல 31–ந் தேதிதான் வங்கிக் கணக்கிலே சம்பளத்தொகை வரவு வைக்கப்படும் என்று தற்போது அரசு கூறி விட்டது. 28–ந் தேதியே சம்பளம் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த சுமார் பத்து லட்சம் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 28–ந் தேதி சம்பளம் என்று முன்கூட்டியே அறிவித்தது ஏன்?

  ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாது என்று அதிகாரிகள் இப்போது தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், புதுச்சேரி மாநிலத்தில் முன்கூட்டியே அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதே, அது எப்படிச் சாத்தியமாயிற்று? ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாதென்றால், எதற்காக அரசு சார்பில் ஓர் அறிவிப்பை முன்கூட்டி தெரிவித்தார்கள்? இதற்கு பெயர்தான் ‘‘துக்ளக் தர்பார்’’.

  ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே சட்டப் பேரவைக்கான 12 குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று, குழுக்களிலே இடம் பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அவரவர்களும் தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டத்தொடரில், இந்த குழுக்களை அமைக்க சட்டப்பேரவையிலே உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

  சட்டக்கல்லூரிகள்

  கேள்வி:– தனியார் கல்வி நிறுவனங்கள் சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே?

  பதில்:– ஆந்திராவில் 37 சட்டக்கல்லூரிகள் இருக்கின்றன. கர்நாடகாவில் 98 சட்டக்கல்லூரிகள் உள்ளன. தமிழகத்திலோ சுமார் 700 பொறியியல் கல்லூரிகள் இருந்த போதிலும் சட்டக்கல்லூரியை பொறுத்தவரை 11 சட்டக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் தான் 2014–ம் ஆண்டு ஜூலை 30–ந் தேதி, தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

  இந்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரித்தான், திருவாரூரில் பெண்களுக்கான தனி சட்டக்கல்லூரி அமைக்க முயற்சித்த அறக்கட்டளையினர் சார்பிலும், சமூக நீதிப்பேரவை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் தனியார் கல்வி நிறுவனங்கள் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை செய்து பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்கள். வரவேற்கத்தக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

  கேள்வி:– இன்றைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி, அவர் யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்றும், அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடுவதில்லை என்றும் கூறப்படுகிறதே? 2009–ம் ஆண்டு நீங்கள் முதல்–அமைச்சராக மருத்துவமனையில் இருந்த போது யாரையாவது சந்திக்க அனுமதிக்கப்பட்டதா? அரசு சார்பில் ஏதாவது அறிக்கை தரப்பட்டதா?

  பதில்:– முதல் அறிவிப்பே அரசின் சார்பில் தான் வெளியிடப்பட்டது. 26–12–2009 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரமும், எனக்கு என்ன உடல்நலப் பாதிப்பு என்பது பற்றிய விவரமும் தெரிவிக்கப்பட்டது. 27–ந் தேதி மருத்துவமனையில் படுக்கையில் இருந்த என்னை, அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத்தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் சந்தித்த புகைப்படங்கள் வெளிவந்தன.

  தமிழக கவர்னராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஜெ.முகாபாத்யாயா, புதுவை நாராயணசாமி மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் என்னை வந்து சந்தித்து கொண்டுதான் இருந்தார்கள்.

  அரசு செய்திக்குறிப்பு

  இன்னும் சொல்லப்போனால் அந்த ஆண்டு வெளியாகவிருந்த நிதி நிலை அறிக்கை பற்றிய விவாதமே மருத்துவமனையில் வைத்தே நடத்தினேன். ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே 2–2–2009 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அவசரமாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டமும் எனது தலைமையில் நடைபெற்றது. 3–2–2009 அன்று அண்ணா நினைவிடத்திற்குச் சென்று விட்டு, அன்று அவசரமாக நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு விட்டு நேராக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன்.

  10–2–2009 அன்று வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், 11–ந் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும் என்றும், டாக்டர்கள் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 10–ந் தேதி ஆங்கில நாளேடு, ‘‘செயல் துடிப்பான முதல்–அமைச்சர் கருணாநிதி மருத்துவமனையை முதல்–அமைச்சர் அலுவலகமாக மாற்றினார்’’ என்றே அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.

  அறுவை சிகிச்சைக்குப்பின் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் தொலைபேசியில் உடல் நலம் கேட்டது பற்றி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. பழைய நாளேடுகளை புரட்டினால் இந்த செய்திகள் உண்மை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  மாணவர்கள் கொலை

  கேள்வி:– 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது பற்றி அரசு மறு சீராய்வு செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

  பதில்:– உண்மைதான். சிறையிலே உள்ள பி. வீரபாரதி என்ற கைதி, தான் 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடுத்த வழக்கில் தான், 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக்கைதியை விடுவிக்க மறுத்த உள்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்ததோடு, அவரது கோரிக்கையை உள்துறைச்செயலாளர் எட்டு வாரத்திற்குள் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும், இதேபோல ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மனுக்களையும் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதே அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களின் விடுதலை பற்றியும் அரசு ஆய்வு செய்யலாம்.

  கேள்வி:– யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ் மாணவர்கள் இருவர் இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்களே?

  பதில்:– யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்சன், நடராய கஜன் ஆகிய இருவரையும் இலங்கை போலீசார் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்ன தெரியுமா? நிற்காமல் சென்றதால், அவர்களை சுட்டுக் கொன்றோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இந்தச்செய்தி ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராஜபக்சே அரசுக்கும், தற்போதுள்ள சிறிசேனா அரசுக்கும் இடையே நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

  கட்டணம்

  கேள்வி:– சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவக் கல்லூரியை தமிழக அரசே கையகப்படுத்திக்கொண்ட போதிலும், மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை குறைக்கவில்லையே?

  பதில்:– தனியாரிடமிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு எடுத்துக்கொண்டு தனி அதிகாரியை நியமித்த பிறகும், மருத்துவ மாணவர்களிடமிருந்து, ஏற்கனவே தனியார் வசூலித்து வந்த கூடுதல் கட்டணத்தையே இன்னமும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். 2013–ம் ஆண்டில், எப்போது அரசுக் கல்லூரியாக அந்தக்கல்லூரி மாறியதோ, அதற்குப் பிறகு அரசுக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கை கூறப்பட்டு வந்தபோதிலும், அ.தி.மு.க. அரசு அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் அதிக கட்டணத்தையே வசூலித்து வருகிறது.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

  News