" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

பெட்ரோல் பங்குகள்–டாஸ்மாக் கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு பெட்ரோல்–மது வாங்க வற்புறுத்திய விற்பனையாளர்கள்

Views - 38     Likes - 0     Liked


 • நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு மதுபானங்களை வாங்க அவற்றின் விற்பனையாளர் வற்புறுத்தினார். இதே நிலை தான் பெட்ரோல் பங்குகளிலும் இருந்தது. ஆனால் ஓட்டல்களில் இந்த நோட்டுகளை வாங்க மறுத்ததால், கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சாப்பிட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

  தீர்ந்த பணம்


  கடந்த 8–ந் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருந்த பொதுமக்களில் பலர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஏ.டி.எம். மையங்களில் உள்ள தானியங்கி எந்திரங்கள் மூலம் தங்களுடைய பணத்தை டெபாசிட் செய்தனர். மேலும் ரூ.100 நோட்டுகளை ஏ.டி.எம். எந்திரங்கள் மூலமாக பெற்றனர்.

  இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்டிருந்த 100 ரூபாய் நோட்டுகள் வெகுவிரைவாக தீர்ந்தன. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் 100 ரூபாய் நோட்டுகளை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதுபோன்ற காட்சிகள் நாகர்கோவில் நகர ஏ.டி.எம். மையங்கள் பலவற்றில் நிகழ்ந்தன.

  வாங்க மறுப்பு


  நேற்று காலை நாகர்கோவில் நகரின் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் மதிய உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மளிகை கடைகளுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற ஆண்கள், பெண்கள் பலரிடம் கடைக்காரர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்றும், 100 ரூபாய் நோட்டுகள் இருந்தால் பொருட்கள் வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினர்.

  இதனால் நகரின் பல இடங்களில் சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றதை காண முடிந்தது. இதே போன்று நாகர்கோவில் சந்தைகளிலும் வியாபாரிகள் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.

  ஓட்டல்களில் அறிவிப்பு பலகை


  இதேநிலைதான் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி கடைகளுக்கு சென்றவர்களுக்கும் ஏற்பட்டது. நகரின் பல ஓட்டல்கள், பேக்கரிகள் முன்பு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. கடுமையான பசியோடு காலை டிபன் சாப்பிடச் சென்றவர்களும், டீ மற்றும் காபி அருந்தச் சென்றவர்களும் கையில் ரூ.500, ரூ.1000 இருந்தும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.

  வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டப் பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு கார், வேன், பஸ் போன்றவற்றில் சுற்றுலா வந்திருந்த பலரும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு ஓட்டல்களில் சாப்பிட முடியாமலும், தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் அவதிப்பட்டனர். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர், 100 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் சாப்பிட முடியாமல் திண்டாடினர். இந்த சிரமத்தை உணர்ந்த ஓட்டல் நிர்வாகி மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக மாநில சுற்றுலாப் பயணிகளிடம், “சாப்பிடுங்கள், உங்களிடம் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை நான் வாங்கிக்கொள்கிறேன்“ என்றார். இதனால் நிம்மதி அடைந்த சுற்றுலாப்பயணிகள் சாப்பிட்டு விட்டு தங்களிடம் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துச் சென்றனர்.

  பரிதவித்த பஸ் பயணிகள்


  அரசு பஸ்களில் பயணம் செய்ய வந்த பயணிகளும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளால் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு அரசு பஸ்சில் சொந்த ஊர் செல்ல பஸ் ஏறிய ஒரு பெண், கண்டக்டரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். உடனே கண்டக்டர் தன்னிடம் சில்லறை இல்லை, சில்லறை இருந்தால் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அந்த பெண் தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியதால் அவரை கண்டக்டர் இறக்கி விட்டார். இதனால் அந்த பெண் பஸ் நிலையத்தில் இறங்கி நின்று கூச்சல் போட்டு அலறினார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.

  இதேபோல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற விவரம் தெரியாமல் விடிய, விடிய பஸ்சில் பயணம் செய்து நாகர்கோவில் வந்தவர்களும், நாகர்கோவிலில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களுக்கு வந்தவர்களும் 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு சில்லறை கிடைக்காமலும், 100 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இவ்வாறு பரிதவித்த ஒரு சிலருக்கு வடசேரி போலீசார் மற்றும் வியாபாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுத்து உதவினர்.

  பெட்ரோல் பங்குகள்


  பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவற்றில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டது. அதே நேரத்தில் பெட்ரோல் பங்குகளில் சில்லறைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் வாகனங்களுக்கு டீசல்–பெட்ரோல் நிரப்பச் சென்றவர்களும், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கச் சென்றவர்களும் முழு பணத்தையும் கொடுக்க நேர்ந்தது.

  நாகர்கோவிலில் உள்ள பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்த வாகன ஓட்டுனர்களிடம் கொடுத்த பணத்துக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பிக் கொள்ளுங்கள் விற்பனையாளர்கள் வற்புறுத்தினர். இதனால் பலர் வேறு வழியின்றி தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிச் சென்றனர். சிலர் பெட்ரோல் வேண்டாம் என்று கூறி சென்றதை காணமுடிந்தது.

  டாஸ்மாக் கடைகள்


  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதில் இருந்து மதுபிரியர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கினர். டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தங்களிடம் சில்லறை இருக்கும் வரை அந்த பணத்துக்கு சில்லறை கொடுத்தனர். சில்லறை தீர்ந்ததும் கொடுக்கும் பணம் ரூ.500 அல்லது ரூ.1000 நோட்டுகள் முழுவதற்கும் மது வாங்கிச் செல்லுங்கள், இல்லையென்றால் சில்லறை இல்லை என்று பதிலளித்தனர். இது மதுபான பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு சிலர் வீடுகளில் ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கொடுத்த பணம் முழுமைக்கும் மதுபானங்கள் வாங்கிச் சென்றனர். சிலர் மதுபானம் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  நகைக்கடைகள் மூடல்


  நேற்று முகூர்த்த தினமாக இருந்ததால் நகைக்கடைகளில் நேற்று காலையிலேயே கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் நகரின் பெரிய நகைக்கடைகள் முதல் சிறிய கடைகள் வரையிலும் கூட்டத்தை காண முடிந்தது. நகைக்கடைகளுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தனர். நகைக் கடைகளைச் சேர்ந்தவர்கள் பலர் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். இதனால் பெரிய கடைகளில் ஏ.டி.எம். கார்டு மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பலர் நகைகளை வாங்கிச் சென்றனர். டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பணம் பெறும் வசதி இல்லாத சிறிய கடைகளில் நகை வாங்க முடியாமல் பலர் திரும்பிச் சென்றனர்.

  நகை வாங்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளுடன் வந்ததாலும், தங்கம் விலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதாலும் கடை திறந்த சில மணி நேரங்களில் நாகர்கோவிலில் உள்ள பெரிய நகைக்கடைகள் சில பூட்டப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டது.

  ரெயில் நிலையங்களில்...


  ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும், சாதாரண டிக்கெட்டுகளுக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்பட்டன. இதனால் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை டிக்கெட் கவுன்டர்களில் கொடுத்து டிக்கெட் எடுத்துச் சென்றனர். அங்கும் இடையிடையே சில்லறை தட்டுப்பாடு பிரச்சினையும் ஏற்பட்டது.

  இதேபோன்று குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பயணிகள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் பெற்றனர்.

  மின்வாரிய அலுவலகம்


  மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்படவில்லை. அதற்கு பதிலாக காசோலை மற்றும் டி.டி. மூலம் பணம் செலுத்தலாம் என பொதுமக்களிடம் கூறப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதேபோல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணம் பெறும் கவுன்டர்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. இதனால் மின் கட்டணம், செல்போன், தொலைபேசி கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  News