" எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!"

பஸ், ரெயில் டிக்கெட் எடுக்கலாம்: பெட்ரோல் நிலையங்களில் கொடுக்கலாம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் 24-ந் தேதி வரை நீடிப்பு சுங்கச்சாவடி கட்டணம் 18-ந் தேதி வரை ரத்து

Views - 41     Likes - 0     Liked


 • பஸ், ரெயில் டிக்கெட் எடுக்கவும், பெட்ரோல் நிரப்பவும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த வருகிற 24-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டணமும் 18-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

  புதுடெல்லி,

  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை, தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து உள்ளது.

  மக்கள் தவிப்பு

  மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்காகவும், தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10–ந் தேதி முதல் வங்கிகளில் காத்துக்கிடக்கிறார்கள்.

  கணிசமான ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததாலும், திறந்து இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் விரைவில் பணம் தீர்ந்து விடுவதாலும் போதிய பணம் எடுக்க முடியாமல், அன்றாட செலவுக்கு போதிய பணம் இன்றி தவிக்கிறார்கள்.

  உயர்மட்டக்குழு கூட்டம்

  மக்களின் இந்த இன்னல்களை போக்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை, நிதி, நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் பொதுமக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், மக்களின் தேவைக்கு போதிய பணம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

  காலக்கெடு நீடிப்பு

  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பொதுமக்கள் எந்த விதமான பதற்றமும் அடைய தேவை இல்லை. ரிசர்வ் வங்கியில் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. மக்களுக்கு பணம் கிடைப்பதற்கான வழிகள் வருகிற நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும்.

  அரசு அறிவித்த செலவினங்களுக்கு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு 14–ந் தேதியுடன் (நேற்று) முடிவடைவதாக இருந்தது. இந்த காலக்கெடு 24–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரிகள், கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  பெட்ரோல் நிலையங்கள்

  குறிப்பாக அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள் (அடையாள அட்டையுடன்), தகன மேடை ஆகியவற்றில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வருகிற 24–ந் தேதி வரை பயன்படுத்தலாம். மேலும் ரெயில் டிக்கெட், மெட்ரோ ரெயில் டிக்கெட், பொது போக்குவரத்து, விமான டிக்கெட் எடுக்கவும், மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்தவும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்கவும், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறவும் இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம்.

  தண்ணீர், மின்சாரம் போன்ற வீட்டு பயன்பாட்டு கட்டணங்களில் முன்பணமாக செலுத்த இந்த நோட்டுகளை பயன்படுத்த முடியாது.

  ஏ.டி.எம்.மில் ரூ.2,000 நோட்டுகள்

  நகர்ப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் அனைத்தும் புதிய ரூ.2,000 நோட்டுகள் வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

  ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழுவில் நிதி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஏ.டி.எம். தொழில்நுட்ப மாற்றியமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதுடன், மக்களுக்கு வேகமாக பணம் கிடைப்பதற்கான வழிகளை இவர்கள் உறுதி செய்வர்.

  இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) முதல் புதிய ரூ.2,000 நோட்டுகளை ஏ.டி.எம்.மில் இருந்து பெறலாம். இதைப்போல புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் வந்துள்ளன.

  மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் சுலபமாக பணம் பெறும் வகையில் ஏராளமான மைக்ரோ–ஏ.டி.எம்.கள் உருவாக்கப்படும்.

  ஒருவர் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

  வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம்

  சிறு வணிகர்களின் வியாபார தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வணிகர்கள் தங்கள் நடப்பு கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.50,000 வரை எடுக்க வழி செய்யப்படுகிறது.

  அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்க்க முடியாத சூழல்களை தவிர மற்ற நேரங்களில் தங்கள் பண பரிவர்த்தனைகளை ஆன்–லைன் மூலமே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் இதற்கான பரிவர்த்தனை கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு தேசிய செலுத்து கழகம் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

  கிராமப்புறங்களை பொறுத்தவரை அங்கு வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிதி நிறுவனங்களின் கையிருப்பு தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இதன் மதிப்பை பல மடங்காக வங்கிகள் உயர்த்தும்.

  அத்துடன் 1.30 லட்சம் கிளை தபால் நிலையங்களில் பணம் மாற்றவும், வழங்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

  பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் வினியோக மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிக அளவிலான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

  சுங்கச்சாவடி கட்டணம்

  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூல் செய்ய முடியாமலும், அவர்களுக்கு சில்லரை கொடுக்க முடியாமலும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிப்பதை கடந்த 9–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த கால அவகாசம் 14–ந் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.

  இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. அதன்படி இந்த அவகாசத்தை 18–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மத்திய அரசு நீடித்து உள்ளது. எனவே அதுவரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 18–ந் தேதி நள்ளிரவு வரை கட்டண வசூல் இல்லை எனவும், இது தொடர்பாக அனைத்து வசூல் நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

  கூட்டுறவு வங்கிகள்

  இதற்கிடையே, மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 24–ந் தேதி வரை தங்கள் கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. எனினும் இங்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றவோ, இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவோ முடியாது எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

  News