நாகர்கோவிலில் புதிய 500 ரூபாய் நோட்டு வினியோகம் பொதுமக்கள் மகிழ்ச்சி
Views - 52 Likes - 0 Liked
-
நாகர்கோவில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மூலம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விரும்பும் தொகை கிடைக்கவில்லை
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்களிடையே பண பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் தொகையையும் பெற முடியவில்லை. சில வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் மத்திய அரசு உத்தரவிட்டுள்ள அதிகபட்ச உச்சவரம்புத்தொகையைக் கூட வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, வங்கிகளில் வழங்கப்படும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு சில்லரை பெற முடியாமலும் மக்கள் தவிக்கிறார்கள். அதற்கு 10, 20, 50, 100 ரூபாய் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிகளில் கடந்த 2 நாட்களைப்போன்று நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பள பணம் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்காக ஏராளமானோர் நேற்று காலையிலேயே வங்கிகளுக்கு வந்து காத்திருந்தனர்.
புதிய 500 ரூபாய்
சில வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்ட தொகையைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் சம்பளம் பெறக்கூடிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கும் முழுமையான தொகை கிடைக்கவில்லை.
சில வங்கிகளில் அதிகபட்சமாக மத்திய அரசு அனுமதித்துள்ள தொகை, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
சில வங்கிகளில் பணம் இல்லை என்று அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் பணம் டெபாசிட் பெறப்பட்டது.
குமரி மாவட்டத்தில் சில தனியார் வங்கிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. அந்த வங்கியிலும், அதன் ஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டு வரவில்லை. நேற்று நாகர்கோவில் வடசேரி டிஸ்டில்லரி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு முதன்முதலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேர்ந்தன. அந்த ரூபாய் நோட்டுகள் அந்த வங்கி முன் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பப்பட்டது. இதனால் அந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது. அவர்கள் புதிய 500 ரூபாய் நோட்டுகளை பெற்றதும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
வடசேரி ஸ்டேட் வங்கிக்கு மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு 10 பண்டல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன என்றும், அவற்றை மற்ற ஸ்டேட் வங்கி கிளைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்க போதுமானதாக இல்லாததால் வடசேரி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது என்றும், இந்த பணமும் ஒரு நாள் அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், எனவே அதிகமாக வந்தால்தான் பிற கிளைகளுக்கு வழங்கவும், பிற ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பவும் முடியும் என வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணம் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக பல வங்கி ஏ.டி.எம்.கள் நேற்றும் பூட்டியே கிடந்தன. பணம் இருந்த ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டு இருந்தன. இதனால் அந்த ஏ.டி.எம்.கள் அனைத்திலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
தபால்நிலையத்தில் வாக்குவாதம்
தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில் பணம் பற்றாக்குறை பிரச்சினை நேற்றும் தொடர்ந்தது. நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு உட்பட்ட துணை தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்களில் பணியாற்றும் 600–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பளம் பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறவும் நேற்று தபால் நிலையங்களுக்கு வந்திருந்தனர். ஆனால் பணம் பற்றாக்குறையால் அவர்கள் கேட்ட தொகையை வழங்க முடியவில்லை.
இதனால் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்களின் சம்பளப்பணம் மற்றும் ஓய்வூதிய தொகை சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அதில் இருந்து ஒவ்வொருவருக்கும் ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் தபால் நிலைய ஊழியர்கள் சிலருக்கும், ஓய்வூதியம் பெற வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோன்ற பிரச்சினை அனைத்து தபால் நிலையங்களிலும் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.News