கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதுகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
Views - 61 Likes - 0 Liked
-
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா தலம்
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் கடந்த மாதம் 16–ந் தேதி முதல் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் சபரி மலைக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
அதன்படி, இரண்டு நாள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு வரத்தொடங்கினர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளில் அறை எடுத்து தங்கி இருந்து, நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டுகளித்தனர்.
படகு தளத்தில் நீண்ட வரிசை
தொடர்ந்து, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினர். பின்னர், ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பகவதியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர். மேலும், கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட காலை முதல் படகுதளத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
இதுபோல், கன்னியாகுமரியில் உள்ள அரசு அருட்காட்சியம், காந்தி நினைவுமண்டம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம், கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு பூங்கா, தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு பூங்கா போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபோல் கன்னியாகுமரி அருகே உள்ள வட்டக்கோட்டை கடற்கரை, சொத்தவிளை கடற்கரை போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.News