" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம்: குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை

Views - 57     Likes - 0     Liked


 • முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.

  முதல்–அமைச்சர் ஜெயலலிதா

  தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் கடந்த 75 நாட்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இடையில் உடல்நிலை தேறி வந்த ஜெயலலிதாவுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானது.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெயலலிதா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் இந்த செய்தி அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகர்கோவில் நகரம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சுற்றி வந்து கடைகளை அடைக்கச்சொல்லி வலியுறுத்தினர். இதனால் நேற்று முன்தினம் மாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

  கல்வீச்சு

  இதேபோல் சுமார் அரை மணி நேரம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்தும், அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும் எந்த பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி–கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பல்வேறு காரணங்களால் வெளி மாவட்டங்களில் இருந்து நாகர்கோவில் வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் சிறிது நேரம் பரிதவிப்புக்கு உள்ளாயினர். அரை மணி நேரத்துக்குப்பிறகு பஸ்கள் மீண்டும் ஓடத்தொடங்கின. அதன்பிறகு நிலைமை சீரடைந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 3 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

  பஸ்கள் ஓடவில்லை

  மேலும் இரவுடன் பஸ் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று காலையில் மார்த்தாண்டம் பகுதிக்கு செல்லக்கூடிய பயணிகள் அதிக அளவில் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்காக ஒரு பஸ் மட்டும் மார்த்தாண்டம் பகுதிக்கு இயக்கப்பட்டது. அதில் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ஏறிச் சென்றனர்.

  வழக்கமாக அதிகாலை 4, 5 மணியில் இருந்து பயணிகள் வருகையினால் பரபரப்பாகிவிடும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகியவை பஸ் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது. பயணிகள் கூட்டமும் பஸ் நிலையங்களில் இல்லை. போலீசார் மட்டும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

  மினிபஸ்கள்–ஆட்டோக்கள்

  அதேபோல் மினிபஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. வாடகை ஆட்டோக்களைப் பொறுத்தவரையில் நாகர்கோவில் நகரில் நேற்று ஒன்றிரண்டு ஆட்டோக்கள் மட்டும் ஓடியதை காண முடிந்தது. கார், வேன் போன்றவையும் இயக்கப்படவில்லை.

  அதே நேரத்தில் குமரி மாவட்டத்துக்கு வந்து சென்ற சுற்றுலா பஸ்கள், வேன், கார்கள் போன்றவை எவ்வித பாதிப்புமின்றி இயங்கின. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் வெளியில் கார்களில் சென்று வந்தன. இதனால் சாலைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து இருந்தது. ஆனாலும் வழக்கத்தைவிட குறைவாகத்தான் இருந்தது. பஸ்கள் ஓடாததால் பலர் சாலைகளில் நடந்து சென்றதை காண முடிந்தது.

  கடைகள் அடைப்பு

  நேற்று 2–வது நாளாக நாகர்கோவில் நகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நாகர்கோவில் கோட்டார், மீனாட்சிபுரம், அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, கே.பி.ரோடு, செட்டிகுளம் சந்திப்பு, இருளப்பபுரம், பீச்ரோடு சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, கோர்ட்டு ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம் சந்திப்பு, வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, அசம்புரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு, மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, பாலமோர் ரோடு, ஒழுகினசேரி, இடலாக்குடி, இளங்கடை போன்ற நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.

  இதேபோல் நாகர்கோவில் நகரில் உள்ள கோட்டார் மார்க்கெட், வடசேரி மார்க்கெட், ஒழுகினசேரி பகுதியில் உள்ள மார்க்கெட் என அனைத்து சந்தைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் உள்ள கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.

  வற்புறுத்தலின்றி...

  வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றின் உரிமையாளர்கள் நேற்று யாருடைய வற்புறுத்தலும் இன்றி தங்களது கடைகளை அடைத்திருந்தனர். திரையரங்குகளில் நேற்று 2–வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளைத்தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டு இருந்தன.

  ஆவின் பாலகங்கள் மற்றும் தனியார் நிறுவன பாலகங்கள் நகரின் சில இடங்களில் திறந்து வைக்கப்பட்டு பால் விற்பனை செய்யப்பட்டன. அவற்றில் சிலவற்றில் மட்டுமே சூடான பால், பாதாம் பால் விற்பனை காலையோடு முடிந்தது. அதன்பிறகு பால் பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. அம்மா உணவகங்களும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

  டீக்கடைகள், ஓட்டல்களும் திறக்கப்படாததால் நேற்று சுற்றுலா வந்த பலர் நகரம் முழுவதும் டீ குடிப்பதற்காகவும், டிபன் மற்றும் சாப்பாடு கேட்டும் நாகர்கோவில் நகரில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்ததை காண முடிந்தது. வடசேரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கேன்கள் மூலம் சிலர் டீ விற்பனை செய்தனர். இதனால் அவர்களிடம் டீக்கு கிராக்கி அதிகமாக இருந்தது. நகரின் முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

  மார்த்தாண்டம்–குளச்சல்

  மார்த்தாண்டம் மற்றும் குழித்துறைகளில் உள்ள நகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரி, துணிக்கடைகள், பேக்கரிகள் உள்பட கடைகளும், ஓட்டல்களும் அடைக்கப்பட்டு இருந்தன. மார்த்தாண்டத்தில் தினசரி மார்க்கெட் இயங்கவில்லை.

  மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் பஸ்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடின. அதே போல் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும் மார்த்தாண்டம் ஜங்ஷனும், அரசு பஸ்கள், மினி பஸ்கள் ஓடாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மார்த்தாண்டம் ஜங்ஷனில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

  களியக்காவிளையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், சாலைகள் வெறிச்சோடியது. பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

  குளச்சல் நகர் முழுவதும் நேற்று கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் நிலையம், இரும்பிலி ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா படத்தை வைத்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

  News