குமரி மாவட்டத்தில் சில வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள்
Views - 36 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் சில வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக சில ஏ.டி.எம்.மையங்கள் மூடியே கிடக்கின்றன.
உச்சவரம்புத்தொகை நிர்ணயம்
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனாலும் மக்கள் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து தாங்கள் நினைத்த தொகையை பெறமுடியாத நிலையும், ஏ.டி.எம்.களில் போதிய தொகை எடுக்க முடியாத வகையில் அதிகபட்ச உச்சவரம்புத்தொகை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த தொகையையும் பணத்தட்டுப்பாடு நிலவும் வங்கிகளில் பெறமுடியவில்லை. இதனால் மக்கள் தினமும் தங்களது தேவைகளுக்காக வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். வங்கிகள் மூலம் சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களும் இதே நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.
நீண்ட வரிசை
இந்தநிலையில் நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பல வங்கிகளில் நேற்று காலையிலேயே அதாவது வங்கிகள் திறக்கப்படுவதற்கு முன்பே வந்து காத்திருந்தனர். சில வங்கிகளில் நீண்ட வரிசை இருந்தது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்டேட் வங்கி கிளையில் வங்கிக்குள் இருந்து வெளியே சாலை வரையில் நீண்ட வரிசையில் பணம் எடுக்க வந்திருந்தவர்கள் காத்திருந்தனர். சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த வங்கிகளில் கேட்ட தொகைக்கும் குறைவாகவே வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.24 ஆயிரம் கேட்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், ரூ.10 ஆயிரம் கேட்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கியில் இருந்து மக்கள் பணம் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் திரும்ப வங்கிக்கு பணம் குறைந்த அளவில்தான் சேமிப்புத்தொகையாகவும், டெபாசிட் தொகையாகவும் வருகிறது. இதனால்தான் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்கள். அதேநேரத்தில் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள பல வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.
500 ரூபாய் புதிய நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் குறைந்த அளவில் வந்துள்ளன. அவற்றை அந்த வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. சில வங்கிகள் ஏ.டி.எம். மூலமும் வினியோகம் செய்து வருகின்றன.
ஒரு மாதத்துக்கும் மேலாக...
ஏ.டி.எம்.களைப் பொறுத்தவரையில், சில இடங்களில் உள்ள ஏ.டி.எம்.மையங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கே கேட்டதொகையை வழங்க முடியாத நிலை இருக்கும்போது, ஏ.டி.எம்.களில் எப்படி பணம் வைக்க முடியும்? என்றனர்.
இதனால் மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்களை வாடிக்கையாளர்கள் வந்து பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தபால் நிலையம்
தபால் நிலையங்களைப் பொறுத்தவரை நேற்று பணத்தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. இதனால் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்ட தொகை முழுமையாக வழங்கப்பட்டது.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். பழுதின் காரணமாக நேற்றும் செயல்படவில்லை.News