கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது
Views - 32 Likes - 0 Liked
-
கன்னியாகுமரியில் நேற்று அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா தலம்
இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் நிலவி வருகிறது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், அங்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். இதனால், கடந்த மாதம் 16–ந் தேதி முதல் கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விடுமுறை நாட்களில் அய்யப்ப பக்தர்களுடன் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வாகனங்களில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
புனித நீராடினர்
அவர்கள் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அதன்பின்பு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அய்யப்ப பக்தர்கள் வருகை காரணமாக நேற்று பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசை காணப்பட்டது.
மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட படகுதுறையில் கூட்டம் அலைமோதியது. படகுதுறையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பிறகே படகில் ஏற முடிந்தது.
இதுபோல், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், பூங்காக்களிலும், கடற்கரை சாலையிலும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள் வருகை காரணமாக கன்னியாகுமரியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கன்னியாகுமரி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.News