சுசீந்திரம் புதிய பாலத்தில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது
Views - 45 Likes - 0 Liked
-
சுசீந்திரம் புதிய பாலத்தில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
புதிய பாலம்
கன்னியாகுமரி–நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தில் குறுகலான பாலம் உள்ளது. இந்த பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் ரூ.7½ கோடி செலவில் புதிய பாலம் கட்டு மான பணி தொடங்கியது.
கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி முடிவடைந்து புதுப்பொலிவுடன் புதிய பாலம் காட்சி அளிக்கிறது. இதையடுத்து புதிய பாலத்தில் சோதனை முறையில் ஒரு நாள் பஸ்கள் இயக்கப்பட்டது. பின்னர் புதிய பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. புதிய பாலத்தில் வர்ணம் தீட்டும் பணி நடந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த பாலத்தை மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் புதிய பாலம் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் புதிய பாலத்தின் வழியாக பஸ்களை இயக்கலாம் எனவும் கூறினார்.
வாகன போக்குவரத்து தொடக்கம்
இதையடுத்து நேற்று காலை போக்குவரத்து நெருக்கடி காரணமாக புதிய பாலத்தில் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டது. புதிய பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பழைய பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பஸ்கள், பழைய பாலத்தின் வழியாக இயக்கப்படாமல் இருக்க அந்த புறத்தின் நுழைவு பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் புதிய பாலம் வழியாக இயக்கப்பட்டன.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் போலீஸ் நிலைய சாலை வழியாக தேரூர், மருங்கூர் செல்லும் வாகனங்கள் மட்டும் பழைய பாலம் வழியாக இயக்கப்பட்டன. ஆனால் அங்கிருந்து வரும் வாகனங்கள், பஸ்கள், புதிய பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்றன.News