குமரி மாவட்ட வங்கிகளில் பணம் எடுக்க அலைமோதும் மக்கள் தொடரும் பணத்தட்டுப்பாட்டால் கடும் அவதி
Views - 33 Likes - 0 Liked
-
குமரி மாவட்ட வங்கிகளில் மக்கள் பணம் எடுக்க அலைமோதி வருகின்றனர். மேலும் தொடரும் பணப்பிரச்சினையால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
தினமும் வங்கிகளுக்கு செல்லும் மக்கள்
நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணரவும் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன் வாயிலாக புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை (ரூ.500, ரூ.1000) செல்லாது என்று கடந்த 37 நாட்களுக்கு முன் அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து வங்கிகளில் இருந்து பணம் பெறவும், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கவும் உச்சவரம்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளில் இருந்தும், ஏ.டி.எம்.களில் இருந்தும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வங்கிகள் ஒரு வாரத்துக்குரிய உச்சவரம்புத்தொகையை ஒரே நாளிலும், பணத்தட்டுப்பாடு உள்ள ஒரு சில வங்கிகள் சில நாட்களாகவும் வழங்கி வருகின்றன. சில வங்கிகள் பணத்தட்டுப்பாட்டால் கொஞ்சம், கொஞ்சமாக வழங்கி வருகின்றன. இதனால் சில வங்கிகளுக்கு மக்கள் தினமும் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பெரும்பாலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் கிடைப்பதால் சில்லரைத் தட்டுப்பாடும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளும் சகஜமாக புழக்கத்துக்கு வரவில்லை.
அலைமோதல்
வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் தினமும் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் இருக்கிறது. அதைவிட வங்கிகளின் விடுமுறை தினங்களுக்கு பிறகு திறக்கப்படும்போது இருமடங்கு கூட்டம் வங்கிகளில் காணப்படுகிறது. இதனால் வங்கிகளுக்குள் நுழையவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மிலாதுநபி அரசு விடுமுறைக்குப் பின்னர் நேற்று வங்கிகள் திறக்கப்பட்டன. அடிக்கடி வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் வந்ததாலும், ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாததாலும், செயல்பட்ட ஏ.டி.எம்.களில் பணம் சரிவர கிடைக்காததாலும் நேற்று காலையிலேயே பணம் பெறுவதற்காக வங்கிகளின் வாயில்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். இதனால் நாகர்கோவில் நகரின் அனைத்து வங்கிகளிலும் நேற்று கூட்டம் அலைமோதியது.
மக்கள் அவதி
நேற்றும் ஒருசில வங்கிகளில் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கேட்ட தொகை வழங்கப்பட்டது. மற்ற வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வரையிலும் வழங்கப்பட்டது. பணத்தட்டுப்பாடு நிலவும் வங்கிகள் சிலவற்றில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது அவசர தேவைகளை சரியான ஆதாரத்துடன் நிரூபித்து ஒரு வாரத்துக்கான உச்சபட்ச தொகையை பெற்றுச் சென்றதையும் காண முடிந்தது. அதே நேரத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள வங்கிகள் அனைத்திலுமே பணத்தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. அதனால் அந்தந்த வங்கிகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில வங்கிகளுக்கு பணம் டெபாசிட் வந்து கொண்டிருப்பதால் அந்த பணத்தை வைத்து சமாளித்து வருகிறார்கள். இவ்வாறு தொடரும் பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
தபால் நிலையங்களில்...
வழக்கம்போல நேற்றும் நாகர்கோவில் நகரில் குறைவான எண்ணிக்கையிலேயே ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. அவற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சில இடங்களில் நீண்ட வரிசையில் நின்று தான் மக்கள் பணம் எடுத்துச் சென்றனர். பல ஏ.டி.எம்.கள் நேற்றும் மூடப்பட்டு இருந்தன.
குமரி மாவட்ட தபால் நிலையங்களுக்கு பணம் வழங்கப்படாததின் காரணமாக நேற்று முதல் மீண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வந்த சேமிப்பு கணக்கு தாரர்களுக்கு கேட்ட தொகை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்பட்டது. இதேபோன்ற நிலைதான் மற்ற தபால் நிலையங்களிலும் உள்ளதாகவும், தற்போது தபால் நிலையங்களுக்கு வரும் டெபாசிட் பணத்தைக் கொண்டு சமாளிப்பதாகவும், அதுவும் நின்று விட்டால் பணம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.News