வங்கிகளில் குறைவான பணம் வழங்கப்படுவதால் கிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு
Views - 58 Likes - 0 Liked
-
வங்கிகளில் குறைவான பணம் வழங்கப்படுவதால் கிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
ரூபாய் நோட்டு பிரச்சினை
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8–ந் தேதி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தனர். இதற்கு மாற்றாக வாரம் ரூ.24 ஆயிரமும், ஏ.டி.எம்.–ல் ரூ.4 ஆயிரமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பொதுமக்களிடம் பணபுழக்கம் குறைந்தது. அன்றாட செலவுக்கு பணம் பெறமுடியாமல் கடும் அவதியடைந்து வருகிறார்கள். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பல நாட்கள் கடந்த பின்பும் ரூபாய் நோட்டு பிரச்சினை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
பணம் எடுப்பதற்காக தினமும் காலை முதல் பொதுமக்கள் வங்கி முன் வரிசையில் காத்து நிற்பது வாடிக்கையாக உள்ளது. வங்கிக்கு குறைவாக பணம் வருவதால் வருகின்ற பணத்தை வங்கி ஊழியர்கள் குறைவாக பகிர்ந்தளிக்கிறார்கள். வங்கியில் வாரம் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது நிறுத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. சில வங்கிகளில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மூடிகிடக்கும் ஏ.டி.எம்.கள்
தற்போது பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பாததால் அவை மூடியே கிடக்கின்றன. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் செலவுக்கு போதிய பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறியதாவது:–
குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கேரள பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்களது சம்பள பணத்தை வங்கியில் சேமித்து வைத்துள்ளனர்.
பணம் இல்லாமல் தவிப்பு
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் குறைவான பணம் கிடைப்பதால் கிறிஸ்துமஸ் செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கிறோம். பண்டிகையை முன்னிட்டு புதிய துணி எடுக்கவும் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்குவது போன்ற செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமம் அடைகிறோம். எனவே, வங்கிகளில் கூடுதல் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.News