" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

குமரி மாவட்டத்தை ஏமாற்றியது மழை; வற்றியது அணைகள் போதிய தண்ணீர் இல்லாததால் 500 ஏக்கர் நெல் வயல்களில் வெடிப்பு

Views - 48     Likes - 0     Liked


 • குமரி மாவட்டத்தை பருவமழைகள் ஏமாற்றியதாலும், அணைகள் வறண்டு போனதாலும் போதிய தண்ணீர் இன்றி 500 ஏக்கர் நெல் வயல்களில் வெடிப்பு விழத்தொடங்கியுள்ளது. பாதிப்பு விவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

  இருபோக சாகுபடி

  குமரி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை, கோடை மழை என ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சில ஆண்டுகளாக பருவமழைகூட பெய்யாமல் இம்மாவட்ட மக்களை வதைக்கும் சூழ்நிலைகளும் ஏற்பட்டு விடுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணைகள் நிரம்பி ஒன்றிரண்டு முறை அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடும் நிலை ஏற்பட்டது.

  ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையும் குமரி மாவட்டத்தை ஏமாற்றியது. தற்போது தீவிரமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றி வருகிறது. குமரி மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் அதாவது, தென்னை, வாழை, ரப்பர், நெல் போன்ற பயிர்கள் செய்யப்படுகிறது. இதில் அணைகளில் தண்ணீர் இருந்தால் மட்டுமே குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி நடைபெறும். ஏனெனில் அணைகளில் உள்ள தண்ணீர் மூலமாக நேரடி பாசனம் பெறக்கூடிய வயல்பரப்புகள் அதிகமாக இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே அணைகளில் தண்ணீர் இல்லையென்றால் நெல் சாகுபடியின் பரப்பு குறைந்து விடும்.

  500 ஏக்கரில் வெடிப்பு

  மழை பொய்த்ததின் காரணமாக நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 10.45 அடியாக குறைந்தது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 33.30 அடியாக குறைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் அணைகளில் இருந்த தண்ணீரை நம்பியும், வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் விவசாயிகள் கும்பப்பூ நெல் சாகுபடியில் இறங்கினர். குமரி மாவட்டத்தில் வழக்கமாக 6,600 எக்டேர் பரப்பில் அதாவது 16,500 ஏக்கரில் கும்பப்பூ சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5,700 எக்டேரில் (14,250 ஏக்கர்) நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

  தற்போது அணைகளில் இருக்கும் தண்ணீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து நெற்பயிர்களையும் காப்பாற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மேலும் அகஸ்தீஸ்வரம், குருந்தங்கோடு, பூதப்பாண்டி, ராஜாக்கமங்கலம் வட்டாரங்களில் 37 எக்டேரில் (91 ஏக்கர்) நெல் நாற்றங்கால் நடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் நாற்றங்காலில் உள்ள நெல்நாற்றை வயல்களில் மாற்றி நட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை மழை பெய்தால் மட்டுமே நடவு செய்யுங்கள், என்று விவசாயிகளிடம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வடகிழக்குப் பருவமழையை வருகிற 30-ந் தேதி வரை அதிகாரிகளும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகிறார்கள். அதன்பிறகும் மழை பெய்யாவிட்டால் விவசாயிகள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளனர். இதுஒருபுறமிருக்க அகஸ்தீஸ்வரம், பூதப்பாண்டி, ராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு வட்டாரங்களில் சுமார் 500 ஏக்கர் நெல்பரப்புகளுக்கு தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த வயல் பரப்புகளில் வெடிப்பு விழத்தொடங்கியுள்ளது.

  முக்கியத்துவம்

  இனிமேல் மழை பெய்தால்தான் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் பரப்புகள் அனைத்தையும் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் வேளாண்மைத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகளும் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அணைகளில் இருக்கும் தண்ணீரை முறைவைத்து வழங்கி வருகிறார்கள். குளத்து தண்ணீரை நம்பி மணவாளக்குறிற்சி, பறக்கை, தேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  இன்சூரன்ஸ் திட்டம்

  குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழைபெய்தால்தான் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள 5,700 எக்டேரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களையும் காப்பாற்ற முடியும். இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் இல்லாததின் காரணமாக அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், பூதப்பாண்டி, குருந்தங்கோடு வட்டார பகுதிகளில் 500 ஏக்கர் நெல்வயல்களில் வெடிப்பு விழ தொடங்கியுள்ளது. மேலும் 37 எக்டேர் நாற்றங்காலில் உள்ள நெல் நாற்றுகளை மாற்றி நட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 37 எக்டேர் நெல் நாற்றுகளை 370 எக்டேரில் நடவு செய்யலாம். குளத்து பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. மழை பெய்தால் மட்டுமே நாற்றங்காலில் உள்ள நெல் நாற்றுகளை வயல்களில் நட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  தண்ணீர் பற்றாக்குறையினால் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் முறை வைத்து வழங்கப்பட்டு வருகிறது. மழை பொய்த்து வருவதை அறிந்து ஏற்கனவே நெல் விவசாயிகளை பிரதம மந்திரியின் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.343 ரூபாய் பிரீமியம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம். இந்த திட்டத்துக்கான கால அவகாசமும் கடந்த 15-ந் தேதியுடன் முடிந்து விட்டது. இதில் சேர்ந்துள்ள விவசாயிகளுக்கு பயிர் எந்த நிலையில் இருந்து சேதமானாலும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். ஆனால் தனிப்பட்ட ஒரு விவசாயி மட்டும் பாதித்திருந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது. ஒரு கிராமம் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

  விவரம் சேகரிப்பு

  மேலும் மழை பொய்த்து வருவதால் வருகிற 30-ந் தேதி வரை மழையை எதிர்பார்க்கவும், அதுவரை மழை பெய்யாவிட்டால் நெல் வயல்களில் குறுகிய கால மாற்றுப் பயிர்களான கடலை, உளுந்து, காய்கறி பயிர்களை பயிர் செய்யவும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேளாண்மைத்துறை சார்பில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நாற்றங்காலில் உள்ள நெல் நாற்றை மாற்றி நடமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து நெல் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு விவரங்களை தினந்தோறும் நானும், பிற வேளாண்மைத்துறை அதிகாரிகளும் சேகரித்து வருகிறோம். அதுதொடர்பான விவரங்கள் தினமும் எங்களது துறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  இவ்வாறு கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன் தெரிவித்தார்.

  குடிநீர் பிரச்சினை

  விவசாயத்துக்குத்தான் மழை பொய்த்ததால் பாதிப்பு என்றால், மக்களின் குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 9.75 அடிக்கு கீழாக சென்றுள்ளதால் நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 253 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், அந்த தண்ணீரில் இருந்து நகர மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

  அணைத்தண்ணீரும் இல்லாவிட்டால் நகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.

  News