2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு திறப்பு: வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
Views - 38 Likes - 0 Liked
-
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் நேற்று திறக்கப்பட்டதால் பணம் எடுப்பதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பணப்பிரச்சினை
நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந்தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பணப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 1½ மாதமாக பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் வருகிறது. இதனால் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன்பு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்கள் வங்கிகள் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் பணம் எடுப்பதற்காக செயல்பட்ட ஏ.டி.எம்.களில் குவிந்தனர். இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் பணம் விரைவில் தீர்ந்துவிட்டது.
கூட்டம் அலைமோதல்
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டன. இந்த 2 நாட்களில் பணம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள் நேற்று வங்கிகளில் திரண்டனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. வடசேரி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஸ்டேட் வங்கி திறப்பதற்கு முன்பாகவே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஒரு சில வங்கிகளில் வாடிக்கையாளர் கேட்ட (அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.24,000) தொகை முழுமையாக வழங்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகள் நேற்று குறைந்த அளவில் டெபாசிட் செய்யப்பட்டதாக வங்கி அதிகாரி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்த சில ஏ.டி.எம்.கள் நேற்று திறக்கப்பட்டு பணம் நிரப்பப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அதிகளவில் வந்தன. இதனால் ரூ.2000 நோட்டுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் அவதியடைந்தனர்.
News