குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை ஆயர்கள் பங்கேற்பு
Views - 63 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு பிறப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்த பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்றனர்.
புத்தாண்டு பிறப்பு
2016–ம் ஆண்டு முடிவடைந்து 2017–ம் ஆண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டு பிறப்பு குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். இதையொட்டி குமரி மாவட்டத்தில் சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் வலம் வந்தபடியே மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
புத்தாண்டு பிறப்பையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு ஆராதனை நடந்தன. பல ஆலயங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் புத்தொளியை பரவச் செய்து புத்தாண்டை வரவேற்றனர்.
ஆயர்கள்
நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அசிசி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நேற்று காலையில் நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்துகொண்டு மறையுரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதுபோல உண்ணாமலைக்கடை அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் நேற்று காலை நடந்த புத்தாண்டு பிரார்த்தனையில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் பங்கேற்று மறையுரையாற்றினார். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் கேக் வெட்டி அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.
சி.எஸ்.ஐ. பேராய பிஷப் தேவகடாட்சம், மயிலாடியில் உள்ள ரிங்கள் தவுபே வேதமாணிக்கம் நினைவு சேகர திருச்சபையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரார்த்தனையை நடத்தினார்.
ஆலயங்களில் புத்தாண்டு பிறப்பு வழிபாடு முடிந்ததும், அங்கு வந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சிறுவர்களுக்கு, பெரியவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.News