மெரினா கடற்கரை முன்புள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை மே 18–ந் தேதிக்குள் அகற்றப்படும் ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்
Views - 61 Likes - 0 Liked
-
மெரினா கடற்கரை முன்புள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை வருகிற மே 18–ந் தேதிக்குள் அகற்றப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளித்துள்ளது.
சிவாஜி சிலை
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை – ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையினால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த சென்னை போக்குவரத்து பிரிவு உதவி போலீஸ் கமிஷனர், சிவாஜி சிலையினால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறியிருந்தார்.
கோர்ட்டு அவமதிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அப்பகுதியில் இருந்து அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால், அந்த சிலையை அரசு அதிகாரிகள் அகற்றவில்லை. இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிலை அகற்றப்பட்டு, மணி மண்டபம் அமைக்கப்படும் இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
காலஅவகாசம்
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வக்கீல், ‘சிவாஜி மணி மண்டபம் அமைக்கும் பணி விரைவாக நடந்துவருகிறது. இந்த பணி முடிவடைந்ததும், சிவாஜியின் சிலையை காமராஜர் சாலையில் இருந்து அகற்றி, மணி மண்டபத்தில் நிறுவப்படும். இந்த பணிகளை செய்து முடிக்க கால அவகாசம் வேண்டும். அதாவது வருகிற மே 18–ந் தேதிக்குள் காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு விடும்’ என்று உறுதியளித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சிலையை அகற்ற வருகிற மே 18–ந் தேதி வரை தமிழக அரசுக்கு காலஅவகாசம் வழங்கினர். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.
News