சென்னையில் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 72 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை பணம், தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
Views - 50 Likes - 0 Liked
-
சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் நிர்வாகிகளின் சொகுசு பங்களாக்களில் நடந்த அதிரடி வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
வருமான வரித்துறை அதிரடி
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை கருப்பு பணம் ஒழிப்பு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.530 கோடி மற்றும் தங்கம், பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து ரூ.201 கோடி மதிப்பில் பணம் சிக்கியது.
தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனை சரிபார்க்கும் பணியை தற்போது நிறைவு செய்துள்ளனர்.
72 இடங்களில் சோதனை
இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 72 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை இ.டி.ஏ குழுமம் மற்றும் புகாரி குழுமம் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் விற்பனை, மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடந்தது.
இந்த குழுமத்துக்கு சொந்தமாக வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம், கிரசண்ட பொறியியல் கல்லூரி, மீனம்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ் கார் ஷோரூம், வோல்க்ஸ்வேகன் கார் டீலர் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் தகவல் மையமான புகாரி டவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர், நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் தலைவர் அப்துல் காதீர் ஏ.ரஹ்மான் புகாரியின் வீடு, இதற்கு எதிரில் உள்ள அவருடைய உறவினர் சொகுசு பங்களா ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
ஏற்றுமதி–இறக்குமதி நிறுவனம்
அதேபோல் விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள லோகையா காலனி, 5–வது குறுக்கு தெருவில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த நிறுவனத்தின் நிர்வாகி வெங்கட்ராமனின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த நிறுவனம் கிரானைட் மற்றும் மார்பிள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்வதுடன் பல்வேறு ஆன்–லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளது.
சின்மயா நகர், பெரியமேட்டில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடந்தது.
இதில் வருமான வரித்துறை துணை இயக்குனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய 600–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை 5½ மணி முதல் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனர்.
ஆவணங்கள் பறிமுதல்
இந்த நிறுவனங்களை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் மகன்களான ஆரீப் புகாரி ரஹ்மான், அப்துல் காதீர் ஏ.ரஹ்மான் புகாரி, அகமது புகாரி ரஹ்மான், அஷ்ரப் புகாரி ரஹ்மான் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டரை, அப்துல் ரஹ்மானின் மருமகன் கலீத் நிர்வகித்து வருகிறார்.
காதர் நவாஷ் கான் சாலையில் உள்ள இவருடைய வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இரவு வரை நடத்திய சோதனையில், பல்வேறு சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சினிமா தயாரிப்பாளர்
விருகம்பாக்கத்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வீடு மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
இந்த சோதனைகளின் போது கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும், சொத்து ஆவணங்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது துல்லியமாக கணக்கிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த குழுமத்துக்கு சொந்தமான பல்கலைக்கழகத்தின் தகவல் மையம் நுங்கம்பாக்கம், மூர்ஸ் சாலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் 3–வது தளம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது. நிர்வாகிகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொகுசு பங்களாக்களில் சோதனை நடத்த வேண்டியிருப்பதால், இந்த சோதனை இன்று (வியாழக்கிழமை) தொடர வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட தகவலை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News