வறட்சியால் பாதிக்கப்படாத அளவில் உயர்தொழில்நுட்ப வேளாண்மையை விவசாயிகளுக்கு அரசு கற்றுக்கொடுக்க வேண்டும்; தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Views - 58 Likes - 0 Liked
-
வறட்சியால் பாதிக்கப்படாத அளவில் உயர்தொழில்நுட்ப வேளாண்மையை விவசாயிகளுக்கு அரசு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாகையில் நேரடி சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கு நிருபர்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி வருமாறு:-
முதலில் முதல்-அமைச்சருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன். நாகைக்குச்சென்று நேரடியாக விவசாயிகளின் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் சென்று பார்த்துவிட்டு, விவசாயிகள் சங்கங்களை சந்தித்துவிட்டு, அவர்கள் கொடுத்த மனுக் களை வாங்கிக்கொண்டேன்.
ஆறுதல்
விவசாயிகளுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறதோ, அவற்றையும் நகல் எடுத்துக்கொடுத்திருக்கிறேன். விவசாயிகள் கொடுத்த அத்தனை கோரிக்கை மனுக்களையும் நகல் எடுத்துக் கொடுத்துள்ளேன். முதல்-அமைச்சர் பொறுமையாக விவசாயிகளின் பாதிப்பை மனிதாபிமான உணர்வோடு கேட்டு அவற்றைக் குறித்துக்கொண்டார். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.
அதிகாரப்பூர்வமாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டது எனக்கு ஆறுதலை அளித்தது.
வறட்சி நிவாரண நிதி
உண்மையிலேயே விவசாயிகள் நாம் நினைப்பதைவிட மோசமான நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உடனே உதவுகிறோமோ, அதுபோல வறட்சி நிவாரண நிதியை உடனே ஒதுக்கி அவர்களுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
உயிரிழந்த பல விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தோம். அடுத்த நாள் உணவுக்குக்கூட வழியில்லாத குடும்பங்கள் உள்ளன. விவசாயிகளை மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளர்களையும் கவனிக்கவேண்டும்.
உயர் தொழில்நுட்பம்
அவர்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்களோ அதற்கு மேல் 25 ஆயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் இழப்பை ஈடுசெய்ய முடியும். விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமாவது கொடுக்கவேண்டும்.
தூர்வாரவில்லை என்பதால் பல இடங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும். உயர்தொழில்நுட்ப வேளாண்மையை அவர்களுக்கு அரசு கற்றுக்கொடுக்க வேண்டும். இஸ்ரேல் போன்ற நாடுகளில் செயற்கை மழை பெய்யச்செய்து மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
எந்தெந்த நாடுகளில் எப்படிப்பட்ட உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான குறிப்புகளையும் முதல்-அமைச்சரிடம் கொடுத்திருக்கிறேன்.
மனநல பாதிப்பு
விவசாயிகளின் பயிர்ப்பாதுகாப்புத்திட்டம் சரியாக விரிவுபடுத்தப்பட வேண்டும். அவர்கள் பெற்ற கடன், வட்டி போன்றவற்றை தள்ளுபடி செய்யவேண்டும்.
விவசாயிகள் மிகுந்த மனநல பாதிப்போடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மன ஊக்கம் என்ற கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று சொன்னேன். அதற்கு முதல்-அமைச்சர், அவர்களை மகிழ்விப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
அரசிடம் இருந்து அறிவிப்பு
இன்றே அரசின் குழுக்கள் சென்று பார்வையிட ஆரம்பித்துவிட்டனர் என்றும் கூறினார். அந்தக் குழுவில் விவசாயிகளும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். மத்திய அரசிடம் கொடுப்பதற்கு தனி அறிக்கை தயார் செய்து வைத்திருக்கிறேன்.
இந்தத் துன்பங்கள் அவர்களை விவசாயத்தில் இருந்து துரத்திவிடக்கூடாது. எனவே, விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நான் குறிப்பிட்டேன்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கும்படி தமிழக பா.ஜ.க. சார்பில் நிச்சயமாக பிரதமரை வலியுறுத்துவேன். ஏற்கனவே மத்திய வேளாண்மைத் துறை மந்திரி ராதா மோகன்சிங்கிடம் கூறியிருக்கிறேன். அப்போது அவர், மாநில அரசிடம் இருந்து இதுபோன்ற கோரிக்கை அதிகாரபூர்வமாக வரவேண்டும். அப்போதுதான் அதுபற்றி அறிவிக்க முடியும் என்று கூறினார்.
62 சதவீதம் பொய்த்த மழை
தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் தகவலைப் பெற்று அதை மத்திய அரசிடம் அளிப்போம் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். எனவே நிச்சயமாக இந்தத் தகவல் சொல்லப்பட்டு விவசாயிகள் பயனடைவார்கள்.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 50 சதவீதம் மழை பொய்த்திருக்கிறது. ஆனால் நமது மாநிலத்தில் 62 சதவீதம் பொய்த்திருக்கிறது. இனி குழுக்கள் சென்று அதை பார்த்துவிட்டு அதுபற்றி அறிவிப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்கும்.
இதில் அரசை குறை குற்றம் சொல்வதற்குப் பதிலாக, விவசாயிகள் பிரச்சினைகளை அரசு தற்போது உற்று நோக்கி வருவது ஆரோக்கியமான நிலையாகும் என்றுதான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.News