நாகர்கோவிலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
Views - 51 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட பெயருடன்கூடிய வாட்ஸ்அப் குரூப் மூலமாகவும், முகநூல் பதிவுகள் மூலமாகவும் நேற்று மதியம் ஒரு தகவல் பலருக்கும் பரவியது. அதில் பிற்பகல் 3 மணி அளவில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள், இளைஞர்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் நேற்று பிற்பகலில் கூடத்தொடங்கினர். இவ்வாறு சுமார் 150–க்கும் மேற்பட்டோர் திரண்டதும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் திடீரென ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபற்றிய தகவலை அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
ஆர்ப்பாட்டத்தின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தராத மத்திய– மாநில அரசுகளை கண்டிப்பதாகக் கூறியும், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டாலும், தனிநபர்கள் யாரும் இந்த போராட்டத்தில் முன்னிலை படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருந்தனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாட்ஸ்அப் எண், செல்போன் எண் போன்றவற்றை பரிமாறிக் கொண்டனர். அடுத்த கட்டமாக வருகிற 27–ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது என்றும் ஆர்ப்பாட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.News