நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் தர்ணா
Views - 34 Likes - 0 Liked
-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நாகர்கோவிலில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாணவர்கள் தர்ணா போராட்டம்
இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று காலை கல்லூரி மாணவர்கள் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். மாணவர்களின் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
நல்ல தலைவர்களாக...
இந்த தர்ணா போராட்டத்தில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது, ‘இந்த போராட்டம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக நடைபெறும் போராட்டம். இந்த போராட்டம் ஜல்லிக்கட்டோடு நின்றுவிடக் கூடாது. நமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும். மாணவர்கள், யாருக்கும் அஞ்சக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும். மாணவர்களில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். தமிழ் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.
இந்த போராட்டத்தில் தனி நபர்கள் யாரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருநங்கைகள் ஆதரவு
மாணவர்களின் இந்த தர்ணா போராட்டத்துக்கு திருநங்கைகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடந்தது.
குளச்சலில் போராட்டம்
ஜல்லிக்கட்டை அனுமதிக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், குளச்சல் தேசிய இளைஞர் இயக்கம் சார்பில் குளச்சல் பஸ் நிலையம் முன் நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது.
இதற்கு இயக்க அமைப்பாளர் சதீஷ் பாரதி தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.News