" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்..."

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்; பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

Views - 44     Likes - 0     Liked


 • தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஜல்லிக்கட்டு என்பது ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு. எனவேதான், ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் தங்களது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் உணர்வுகளை உணர்வதோடு மட்டுமல்லாமல், அந்த உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவேதான், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமரையும், மத்திய அரசையும் தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.

  ஒட்டுமொத்த தடை

  கடந்த 2006–ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தடை செய்து பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வந்துள்ளன. என்றாலும், இடைக்கால ஆணைகளின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இறுதியாக 7.5.14 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு 19.5.14 அன்று தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் 16.11.16 அன்று தள்ளுபடி செய்து விட்டது.

  உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்ட காரணத்தால், மத்திய அரசின் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டால்தான், ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கடந்த 11–ந் தேதியன்று நான் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளேன். இதில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தற்போது மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

  ஜெயலலிதா கோரிக்கை

  உச்சநீதிமன்றத்தின் 7.5.14 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த இயலாது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

  7.8.15 அன்று பிரதமருக்கு ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார். 11.7.11 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், 1960–ம் ஆண்டு மிருக வதை தடுப்பு சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

  அறிவிக்கைக்கும் தடை

  2015–ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேசியிருந்தனர். என்றாலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்த வித மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா 22.12.15 அன்று பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

  அந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜெயலலிதாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.16 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது.

  அந்த காப்புரையில், உச்சநீதிமன்றம் தனது 7.5.14 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது. என்றாலும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததில், 12.1.16 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

  வலுவான வாதங்கள்

  அதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று பிரதமரை கடிதம் மூலம் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவினாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரை 19.12.16 அன்று நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நான் அளித்தேன்.

  அதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.17 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.

  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில், 7.1.16 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையை எதிர்த்து சி.யூ.பி.ஏ., பீட்டா இந்தியா, பியாடோ உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இதில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை எடுத்துரைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

  நம்பிக்கை உள்ளது

  இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதிலும், அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்தது தமிழக அரசுதான்.

  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது என்பதற்கான வலுவான வாதங்களை தமிழக அரசு எடுத்து வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

  பிரதமருடன் இன்று சந்திப்பு

  ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் எனில், உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிட வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு நடத்திடவேண்டுமெனில் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

  நமது உரிமைகளை நிலைநாட்ட, பாரம்பரியத்தை காத்திட, உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திட, அறவழியில் மாணவர்களும், பொதுமக்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றியுள்ள தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.

  19–ந் தேதி (இன்று) காலை டெல்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  புறப்பட்டு சென்றார்

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 10.30 மணிக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.15 விமானத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

   

  News